தென்னிலங்கை அரசியல் பரபரப்புக்கள் மத்தியில் லஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 17 ஆம் திகதி காலை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
எனினும், சிங்கள-இந்து புத்தாண்டு காலத்தில் ஆணைக்குழுவில்; முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேறு திகதியை கோர நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
அக்காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியும் அவரது வழக்கறிஞர்களும் கொழும்பில் இருக்க மாட்டார்கள் எனவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.