முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் அவரைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், எந்தவொரு குற்றவாளியும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோமெனவும் இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசசிங்கம் கொலை தொடர்பில் ஜந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிள்ளையான் பின்னராக கோத்தபாய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றிய நிலையில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள் கைதுகள் மீதான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் கும்பல் மீது தற்போது முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.