இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் சிறையில் இருந்து வெளியேறினார்.
மணல் அகழ்வு தொடர்பில் அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக 15 லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவத்திற்கு ஆதரவு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
இருப்பினும், சந்தேக நபரால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை அவர் அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால், அவர் சிறையில் இருந்து வெளியேறினார்.