இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, சந்தேக நபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யத் தவறியதால், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடமிருந்து மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெறுவதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னதாக, கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழு அவரை கைது செய்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
முதலில் அவர் ஏப்ரல் 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இன்று பிணையில் விடுவிக்கப்பட்டாலும், பிணைக் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.