Home யாழ்ப்பாணம் எமது கூட்டானது உள்ளூராட்சி மன்ற கூட்டாக மட்டும் அமையாது

எமது கூட்டானது உள்ளூராட்சி மன்ற கூட்டாக மட்டும் அமையாது

by ilankai

எமது  கூட்டானது உள்ளூராட்சி மன்ற கூட்டாக மட்டும் அமையாது தொடர்ந்து தமிழ் தேசிய இருப்பை பாதுகாப்பதற்கும் தமிழினத்திற்கான குரலாகவும் இணைந்து பயணிப்போம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவிக்கையில் 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜேவிபி யின் மாயையில் சிக்கி தமிழ் மக்கள் ஒரு பகுதியினர் ஈர்க்கப்பட்டமை உண்மையான விடயம். 

தமிழ் மக்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு மாத காலங்கள் போதும் என நினைக்கிறேன். 

தென் இலங்கைக்கு வேண்டுமானால் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தலாக அமையலாம் ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் உள்ளூராட்சி மன்ற அதிகாரம் என்பது தமிழ் மக்களின் உரிமை போராட்டம் சார்ந்த பிரச்சனை.

சிங்கள தேசியவாதம் விதைக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியவாதத்தை பாதுகாப்பதற்காகவும் தமிழ் மக்களின் இருப்புக்களை பாதுகாப்பதற்கான ஒரு தேர்தலாக உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலை பார்க்க வேண்டும்.

2009 மே 18 உரிமை போராட்டம் மெளனிக்கக்கப்பட்ட பின் சிலர் உரிமைப்போயாட்டத்த்தை விலக்கி தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்ய ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்த கட்சிகளை மெல்ல மெல்ல உடைத்து சிங்கள தேசியத்திற்கு உயிரோட்டம் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். 

அவ்வாறான ஒரு சந்தர்ப்பமாக நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட ஏக்கிய ராஜ்சிய என்ற ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை தமிழ் மக்களுக்கான தீர்வாக திணிக்க முயற்சியில் ஈடுபட்டார்கள். 

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரசியலில் இருந்து நீக்கி இருக்கின்ற நிலையிலும் ஏதோ ஒரு வகையில் சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்துவதற்காக காட்சியின் பொதுச் செயலாளராக வந்துள்ளார். 

வீட்டில் இருக்கும் கிருமியை அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களுக்கு இருக்கின்ற நிலையில் அதற்கான முடிவுகளை அவர் சார்ந்த கட்சிக்கு வழங்க வேண்டும்

எமது  கூட்டானது உள்ளூராட்சி மன்ற கூட்டாக மட்டும் அமையாது தொடர்ந்து தமிழ் தேசிய இருப்பை பாதுகாப்பதற்கும் தமிழினத்திற்கான குரலாகவும் இணைந்து பயணிப்போம்.

ஏனெனில் தமிழ் தேசிய நிலைப்பட்டில் உள்ளவர்களை இணைத்து ஏனையவர்களை நிராகரிப்பதன் மூலமே தமிழ் தேசியத்தை பாதுக்க்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்த பின்னரே எமது கூட்டினை அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தோம்.

ஆகவே தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்திற்காக  உயிரிழந்த மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள் கை கால் இழந்தவர்களின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள் உங்கள் கைகளால் வழங்கப்படும் வாக்குகள் உண்மையான  தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக அமைய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles