கடுமையான விமர்சனங்கள் மத்தியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழாக கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவனை இலங்கை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஸ்டி என்ற சிவில் செயற்பாட்டாளரிற்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து, கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட ருஸ்டி பலத்த எதிர்ப்புக்கள் மத்தியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்;.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி பயங்கரவா தடைச்சட்டத்தினை நீக்கப்போவதாக சொல்லியே ஆட்சி ஏறிய நிலையில் ஜனாதிபதி அனுர அனுமதியுடன் அதே பயங்கவாத தடைச்சட்டத்தின் கீழ் மொஹமட் ருஸ்டி கைதாகியிருந்தார்.
இதனிடையே கட்டமைக்கப்பட்ட பாதாள உலக நடவடிக்கைகளை ஐந்து மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்கள் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழ்வதற்குத் தேவையான சூழல் விரைவாக உருவாக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய சுமார் 1,700 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் சிலர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறி பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.