எதிர்வரும் 20ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான புத்திக மனதுங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்தோடு கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் பேராயர் இல்லத்திற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் ஆறு வருடங்கள் பூர்த்தியடையும் இந்த ஆண்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சிறப்பு திருப்பலிகள் தேவாலயங்களில் நடத்தப்படவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனி தேவாலயம், கட்டுவாபிட்டியாவில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம் என்பனவற்றுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.