Home யாழ்ப்பாணம் நீதியமைச்சரின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும்.

நீதியமைச்சரின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும்.

by ilankai

நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்து கொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் வெளியேறியமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

 “இன்று காலை நீதியமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் எனும் ஒரு அமைப்பு எம்மை தையிட்டியில் சந்தித்து காணி உரிமையாளர்களின் காணி உறுதி, தோம்புகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆராய்ந்து அவற்றின் நகல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். மேலும் குறித்த அமைப்பினர் விகாராதிபதியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நாகவிகாரையில் நீதியமைச்சர் தலைமையிலான ஓர் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் நீதியமைச்சரின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும். எனவே குறித்த எமது ஆவணங்கள் ஆராயப்பட்டு உரிய தீர்வு வழங்கப்படும் என்பதாகவே எமக்கு கூறப்பட்டிருந்தது.

ஆனாலும் நீதியமைச்சர் தனது தலைமை உரைக்குப் பின்னர் தேர்தல் காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்களில் தம் ஈடுபடுவது பொருத்தமற்றது எனக் கூறி வெளியேறியிருந்தார். இதனால் காலையில் நாம் சந்திப்புகளை மேற்கொண்ட அதே குழுவினருடனேயே மீண்டும் கலந்துரையாடல் ஈடுபட வேண்டிய நிலை காணப்பட்டிருந்தது. 

இந்த இரு கூட்டங்களிலும் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்த சிலர் வேட்பாளர்களாக இருந்தமையால் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை. சட்ட விதிகளுக்கு அமைவாக நாம் இதனை எதிர்க்கவில்லை.

அமைச்சரின் இக்கலந்துரையாடலுக்கான வருகையை நாம் வரவேற்றத்துடன் எமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நம்பியிருந்தோம். ஆனாலும் அவர் எமது பிரச்சனைகள் குறித்து எதுவுமே பேசவில்லை. 

அமைச்சரின் வெளியேற்றத்தின் பின்னர் மதகுருக்களின் போதனைகளே அங்கு நடைபெற்றிருந்தது. ஆனாலும் மிகுந்த சவாலுக்கு மத்தியில் அவர்களுக்கு இது ஒரு சட்ட விரோத கட்டடமே தவிர இந்த விவகாரத்துக்கு எவ்வித மதச் சாயங்களும் பூச வேண்டாம் எனும் எமது தரப்பு நியாயங்களையும் கோரிக்கைகளையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

இதேவேளை இக்கலந்துரையாடலுக்கு பெளத்த மகா சங்கத்தை சார்ந்த நான்கு பிரதிநிதிகள் வந்திருந்ததுடன்  பொருத்தமற்ற தமது தரப்பு நியாயங்களை முன்வைத்திருந்தனர்.  

அவர்களுக்கும் எமது தரப்பு பத்திகளை தெளிவாக நாம் முன்வைத்திருக்கிறோம். இந்நிலையில், தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சார்ந்தவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்விவகாரம் தொடர்பான தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் அதேவேளை, இருதரப்பு நியாயங்களையும் பரிசீலித்து ஒரு தீர்வை எட்டவுள்ளதாக உறுதியளித்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

Related Articles