தொழிற்சாலைகள் வடக்கில் மூடப்பட்டுள்ளதால் இளையோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். விவசாயம் மற்றும் மீன்பிடி வடக்கின் முக்கிய துறைகளாகவுள்ள நிலையில் உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் அதிகளவானோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் என உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண நா.வேதநாயகன் எடுத்துக்கூறியுள்ளார்.
உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன் போது, ஆளூநர் , போரால் வடக்கு மாகாணம் கடந்த 3 தசாப்தங்களாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.
தொழிற்சாலைகள் வடக்கில் மூடப்பட்டுள்ளதால் இளையோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். விவசாயம் மற்றும் மீன்பிடி வடக்கின் முக்கிய துறைகளாகவுள்ள நிலையில் உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் அதிகளவானோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும்
விவசாயிகளின் உற்பத்திப்பொட்களுக்கு நிலையான விலை கிடைக்காமையால் அவர்கள் விவசாயத்தை கைவிடும் நிலைமை காணப்படுகிறது,
கடந்த காலங்களில் சில குளங்கள் ஊடாக ஏற்று நீர்பாசனம் செய்யப்பட்டு வந்தது. அது தற்போது இல்லாது போயுள்ளமையால் குறிப்பிட்ட சில பயிர்களை விவசாயிகள் மேற்கொள்ள முடியாத நிலைமை இருக்கின்றது என தெரிவித்தார்.
இதன் பின்னர் தமது திட்டம் தொடர்பில் உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவினர் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக உலக வங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உதவுவுதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
2026 – 2034 ஆம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் திட்டங்கள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்க திட்டமிடப்படுவதாகத் தெரியப்படுத்தினர்.
உலக வங்கி உட்கட்டுமானத்துக்கான முக்கியத்துவத்தைவிட ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்கே முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, விவசாயம், மீன்பிடி ஆகிய துறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.
அதேநேரம், நெடுந்தீவுக்கு தமது குழுவினர் நேரடியாகச் சென்றனர் என்றும் இதன்போது சுற்றுலாத்துறைக்கான அதிகளவான வாய்ப்புக்கள் அங்கு இருந்தபோதும் போக்குவரத்து சவாலாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உலக வங்கி நிபுணத்துவக் குழுவினரின் அவதானிப்புக்களுடன் உடன்படுவதாகக் தெரிவித்த ஆளுநர், பிரதான வீதிகள் கடந்த காலங்களில் புனரமைக்கப்பட்டதாகவும் விவசாய வீதிகளும், உள்ளூர் இணைப்பு வீதிகளும் புனரமைக்கப்படவில்லை எனவும், இதனால் சுற்றுலாத்துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாகவும் ஆளுநர் கவலைவெளியிட்டார்.
தமது அவதானிப்புக்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் அடிப்படையில் கொழும்பில் அடுத்த வாரம் அளவில் இறுதிக்கட்டக் கலந்துரையாடல் தேசிய திட்டமிடல் அலுவலகத்துடன் இடம்பெறும் என்றும் உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநருடன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் குரூஸ் ஆகியோர் பங்கேற்றனர்.