Home இலங்கை ஜே.வி.பியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும்

ஜே.வி.பியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும்

by ilankai

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரச தலைவர் என்ற பதவிக்கான கடமைகளில் இருந்து விலகி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை தேர்தல் பிரச்சாரங்கள் ஊடாக நிறைவேற்றுகிறார். இதுவா சிறந்த அரசியல் கலாச்சாரம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்ட மேடைகளில் உரையாற்றுகிறார். அரச தலைவர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை நிறைவேற்றுகிறார். 

இது எந்தளவுக்கு முறையானது. இதுவே தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசியல் கலாச்சாரம்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர்கள் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று ஆளும் தரப்பு குறிப்பிடுவது முறையற்றது. 

விமர்சிப்பவர்கள் சிறை செல்ல வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் சிறையில் தான் இருக்க  வேண்டும். 

ஏனெனில் இவர்கள் கடந்த  காலங்களில் அரசாங்கங்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து  வீதிக்கு இறங்கி போராடினார்கள். 

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.  நாட்டுக்காக மேற்கொள்ளும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

Related Articles