குப்பைகளைக் கொட்டுபவர்கள் தொடர்பில், அவர்களை அடையாளப்படுத்தினால் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றுச்சூழல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
அதன் போது, செம்மணி, வல்லைவெளி, கைதடி – கோப்பாய் வீதிகளில் கோழிக்கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேபோன்று பல்வேறு இடங்களிலும் குப்பைகளைக் கொட்டுவது தொடர்பிலும் தெரியப்படுத்தப்பட்டது.
இவ்வாறு கழிவுகளைக் கொட்டுபவர்களையும், குப்பைகளைக் கொட்டுபவர்களையும் அடையாளப்படுத்திதருமாறும் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சுற்றுச்சூழல் பொலிஸார் இதன்போது குறிப்பிட்டனர்.
அதேவேளை சந்தைகளை அண்மித்த பகுதிகளிலும், சில பிரதான வீதிகளிலும் முறையற்ற விதத்தில் வாகனங்கள் தரித்து நிறுத்தப்படுவதாகவும் இதனால் நெரிசல்கள் ஏற்படுகின்றது என்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் சுட்டிக்காட்டினர்.
பொலிஸார் பற்றாக்குறை இருக்கின்றது என்றும் குறிப்பாக பாடசாலை நாட்களில் பாடசாலைச் சூழலில் கடமையில் ஈடுபடவேண்டியிருப்பதால் இந்த நிலைமை இருக்கின்றது என்றும் பொலிஸார் பதிலளித்தனர்.
மேலும் சாட்டி உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளிலும் விடுமுறை நாட்களில் அதிகளவானோர் வரும் நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.