குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களை நாடுகடத்தும்போது அவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரையும் கண்காணிப்புக்காக அனுப்புவது மேற்கு நாடுகளின் சட்ட வழமை. இதனைப் புரிந்து கொள்ளாது தம்மை பாதுகாப்புடன் நாட்டுக்கு அனுப்பிய பிரித்தானியா இப்போது குற்றவாளியாகப் பார்க்கிறது என்று கருணா கூறுவது வேடிக்கையான விநோதம். 

இலங்கையின் உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் வெற்றிக்கான பரப்புரை ஒருபக்கம் இடம்பெற, வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் ஊடாக இணக்கம் காணும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறுகிறது. 

மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தரப்புகளின் சட்டத்தரணிகள், சட்டமாஅதிபர் தலைமையில் வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் சகிதம் தேர்தல் ஆணையாளரை இன்று முப்பதாம் திகதி சந்தித்து இது தொடர்பாக ஒரு முடிவுக்கு வர உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. எதுவானாலும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி உயர்நீதிமன்றம் நியாயமான ஒரு தீர்ப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

கிளிநொச்சித் தொகுதியிலுள்ள பூநகரிக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கிளிநொச்சித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து வெளியிடுகையில் தமது தொகுதியின் மூன்று சபைகளையும் தமிழரசு கட்சி வெற்றி கொள்ளுமென்று அறிவித்துள்ளார். கட்சியின் தலைவராக தெரிவான சிறீதரன் இப்போது தமது தொகுதியை மட்டும் மையப்படுத்தி கட்சி வெற்றி பெறுமென்று அறிவித்திருப்பது அவரே மற்றைய தொகுதிகளை வேண்டாப் பிள்ளையாக தள்ளுவதுபோல் தோற்றம் தருகிறது. 

இன்றுள்ள சூழ்நிலையில் வடக்கு கிழக்கு முழுவதையும் தமிழர் தரப்பு கையகப்படுத்த வேண்டுமெனில் அதில் தமிழரசு கட்சிக்கே கூடுதலான பங்குண்டு. நாடாளுமன்ற தேர்தல் கால மற்றும் கட்சியின் தலைமைத் தேர்தல் கால விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு உள்;ராட்சிச் சபைத்தேர்தல் பொருத்தமான ஒன்றல்ல என்பதே தமிழரசுக் கட்சிக்காரர்கள் இப்போது உணராவிட்டால் எப்போதுமே உணர முடியாது. 

தெற்கில் உள்ளூராட்சித் தேர்தல் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பமான வேளையில், அல்ஜசீரா தொலைக்காட்சி ரணில் விக்கிரமசிங்கவின் செவ்வியை ஒளிபரப்பி பலரையும் திசை மாற்றியது.  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இயங்கிய பட்டலந்த வதைமுகாமை அல்ஜசீரா கிளறி விட்டுள்ளது. கொழும்புப் பெரும்பாகத்தில் களனிப் பகுதியை ஒட்டியதாக உள்ள பியகம தொகுதியின் வீடமைப்புத் திட்டத்தில் பட்டலந்த முகாம் அமைந்திருந்தது. 1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி.யினர் மேற்கொண்ட அட்டகாச வன்செயல்களில் ஈடுபட்டவர்களென கைதானவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க இந்த முகாம் அமைக்கப்பட்டது. 

பியகம தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க இருந்ததால் இந்த முகாம்களுக்குப் பொறுப்பாக அவர் செயற்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் ஜே.வி.பி.யினர். ஆதலால் பட்டலந்த தொடர்பான ஆணைக்குழு அறிக்கையை தங்கள் ஆட்சியின்போது இவர்கள் தூசு தட்டி எடுப்பதில் நியாயமுண்டு. இலங்கை-இந்திய ஒப்பந்தம் எனப்படும் ஜே.ஆர். – ராஜிவ் ஒப்பந்தத்தை எதிர்த்து 1987-1989 காலப்பகுதியில் ஜே.வி.பி. நடத்திய போராட்டம் எல்லை கடந்தது. இந்தியாவுக்கு எதிரான போராட்டம் என்றே இது கூறப்பட்டது. 

ஆனாலும், இதனால் இந்தியப் பொருட்களை விற்பனை செய்த பெட்டிக்கடை தமிழ் வணிகர்கள் உட்பட பெரும் முதலாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்திய தயாரிப்புகளான வீபூதி, சந்தனம், குங்குமம், கற்பூரம் விற்பனை செய்த கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இந்தியப்படங்களை திரையிட்ட திரையரங்குகளும் தகர்க்கப்பட்டன. 

இவ்வகையான அராஜகங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகி பட்டலந்த முகாமில் வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிய ஜே.வி.பி.யின் மறுவடிவமான அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி அரசு முனைகிறது. காணாமற்போன தோழர்களுக்காக இன்றைய தோழர்கள் குரல் கொடுக்கிறார்கள். எனினும், இந்த விசாரணைக்குழு அறிக்கையினால் எதுவுமே வெளிவரப்போவதில்லை என்பதே பல அரசியல் தலைவர்களின் கருத்து. 

உள்;ராட்சித் தேர்தல், ரணிலின் பட்டலந்த முகாம் ஆகிய இரண்டையும் சற்றே பின்தள்ளிவிட்டு பிரித்தானிய அரசின் தடைவிதிப்பு இப்போது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மூன்று படைத்துறை முன்னாள் அதிகாரிகளுக்கும், விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராகவிருந்து அரசாங்க தரப்புக்கு மாறிய கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் பிரித்தானிய அரசு பயணத்தடையுடன் சொத்து முடக்க அறிவிப்பையும் வெளியிட்டது. 

பாதுகாப்புப் படைகளின் பிரதானியான சவேந்திர சில்வா, கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணகொட, இராணுவத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான ஜகத் ஜெயசூரிய ஆகியோரே தடைக்குள்ளாகியிருக்கும் முன்னாள் படைத்துறை அதிகாரிகள். இவர்களுடன் நாலாவது ஆளாக கருணாவுக்கும் பிரித்தானிய அரசு தடைவிதித்துள்ளது. 

இலங்கைப் படைத்துறையைச் சேர்ந்த சிலருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் மனித உரிமைகள் குற்றச்சாட்டில் ஏற்கனவே தடை விதித்துள்ளன. ஆனால், பிரித்தானியா விதித்துள்ள இந்தத் தடை, அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றுள்ளதால் அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. 

போர் வெற்றியைக் கொண்டாடிய அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இந்தத் தடையை எதிர்த்து முதலில் அறிக்கை விட்டவர். பிரித்தானியாவின் தடை உத்தரவை தாம் நிராகரிப்பதாகக் கூறியுள்ளதோடு, நாட்டைக் காப்பாற்றிய முன்னாள் பாதுகாப்புப் படையினரை வெளிநாட்டு சக்திகளிலிருந்து பாதுகாக்க வேண்டியது தற்போதைய அநுர குமர அரசின் பொறுப்பு என்று இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சிங்கள தேச பக்தர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர ஆகிய மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் நோக்குடன் பிரித்தானிய தடையைக் கண்டித்து அறிக்கைகளை விடுத்து வருகின்றனர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த நவசமாஜ கட்சியின் வாசுதேச நாணயக்காரவும் தமது பங்குக்கு தடையைக் கண்டித்து ஓர் அறிக்கையை விடுத்துள்ளார். 

போர்க்கால ராணுவ தளபதியான சரத் பொன்சேகாவின் அறிக்கை சற்று வித்தியாசமானதும், குழப்பமானதும். மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டிருந்தால் ராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்துள்ள இவர், சவேந்திர சில்வா எந்தக் குற்றமும் செய்யாதவர் என்று வக்காலத்து வாங்கியிருப்பது விநோதமானது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கை இன்னொரு வகையில் வித்தியாசமானது. கருணாவுக்காக அல்லாது படையினருக்காக அரசாங்கம் முன்னிலையாக வேண்டுமென இவர்கள் விடுத்திருக்கும் வேண்டுகோள் கருணா மீதான தடையை ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்துகிறது. 

அநுர குமர அரசும் ஓர் அறிக்கை விடுத்துள்ளது. எந்தவொரு மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டுமென்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சுட்டியுள்ளார். இதுவரை பிரித்தானிய தடை தொடர்பாக வெளிவந்த எந்த அறிக்கைகளும் தடைசெய்யப்பட்டவர்கள் குற்றம் புரியாதவர்கள் என்று சொல்லவில்லை. இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றே கேட்டுள்ளன. ஆனால், இலங்கை அரசின் அறிக்கை அதனையும் சொல்லாது மிகவும் பலவீனமானதாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். 

தடைசெய்யப்பட்ட நால்வரில் தனித்து விடப்பட்டுள்ள கருணா வெளியிட்டிருக்கும் கருத்து குழந்தைத்தனமானது. பிரித்தானியாவிலிருந்து அந்த நாட்டு அரசின் பாதுகாப்புடன் தாம் அன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அந்த பிரித்தானியாவுக்கு இப்போதுதான் கருணா பிழைவிட்டது தெரிகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

கோதபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது அவரது உத்தரவின்பேரில் வழங்கப்பட்ட இலங்கையின் ராஜரிக கடவுச்சீட்டில் பிரித்தானியா சென்ற கருணா அங்கு கைது செய்யப்பட்டு 2008ம் ஆண்டு ஜூலை 3ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர். மேற்கு நாடுகளில் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டவர் நாடு கடத்தப்படும்போது அவர் தப்பி விடக்கூடாது என்பதற்காக அந்நாட்டு அதிகாரி ஒருவரின் கண்காணிப்பில் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவது நடைமுறை. இதனை அந்நாட்டின் பாதுகாப்போடு தாம் நாடு திரும்பியதாக கருணா கதையளப்பது வேடிக்கையானது. 

தற்போது கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அரசியலில் ஈடுபட்டுள்ள கருணா இத்தடையை தமக்கான பலமாக்குவதில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாண சபைகளை தாங்கள் கைப்பற்றாவிட்டால் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிவிடுமென்று கூறி இங்கு வாழும் சிறுபான்மை இனங்களுக்கிடையே மோதலுக்கும் கருக்கூட்டியுள்ளார். 

போரின்போது பல இன மக்களும் உயிரிழந்துள்ளனர். இதனை மீளக் கிளறுவதால் இனங்களுக்கிடையில் முரண்பாடுதான் ஏற்படும் எனும் ஞானஉபதேசத்தையும் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான கருணா செய்வது முன்னுக்குப்பின் முரணானது. 

Related Articles