வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிட வேண்டியிருக்கும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
அதன் போது, வீதி மின்விளக்குகள் பொருத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி அதன் ஊடாக அமைச்சரவைப் பத்திரம் சமர்பிப்பதற்கு ஏதுவாக யோசனைகளை வடக்கு மாகாணத்தின் சார்பில் வழங்குவதற்கு ஆளுநர் கோரினார்.
அதன் போது, இலங்கை மின்சார சபை வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு இடத்துக்கு இடம் அதிகளவான கட்டணத்தை அறவிடுவதாகவும் தற்போது வீதி மின்விளக்குகளின் பாவனைக்கு மின்சாரக் கட்டணத்தையும் கோர முற்படுவதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்கள் தெரிவித்தனர்.
எனவே கடந்த காலங்களைப்போன்று இலவசமாக மின்விளக்குகள் பொருத்துவதற்கு மின்சாரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர்.
அவ்வேளை உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளில் இலங்கை மின்சார சபை எந்தவொரு கட்டணமும் இன்றியே மின்கம்பங்களை நடுகை செய்துள்ளதை வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் சுட்டிக்காட்டினார்.
எனவே வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிடவேண்டியிருக்கும் என குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கை மின்சார சபையின் ஒப்பந்தகாரர்கள், மின்சார தடங்களுக்கு இடையூறு எனத் தெரிவித்து வீதிகளில் இருக்கும் மரங்களை ஒழுங்குமுறையில்லாமல் வெட்டுவதாகவும், வெட்டும் மரங்களின் குப்பைகளை வீதியில் அப்படியே போட்டுவிட்டுச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
அதை மேற்கொள்ளுமாறு ஆளுநர் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.