Home இந்தியா இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 24% சம்பள உயர்வு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 24% சம்பள உயர்வு

by ilankai

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 24 சதவீத சம்பள உயர்வை மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுவரை மாதம் ரூ.1 இலட்சமாக இருந்து. இனிவரும் காலத்தில் ரூ.1.24 இலட்சம் சம்பளம் வழங்கப்படும்.

விலை உயர்வுக்கான கணக்கீடு செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற விவகார அமைச்சகம், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி கொடுப்பனவுகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் ஆகியவற்றை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளாந்த கொடுப்பனவுகளையும் பெறலாம்.

அந்த அறிவிப்பில், நாளாந்தம் ரூ.2,000- இருந்து  ரூ.2,500 ஆகவும், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரூ.25,000 இலிருந்து ரூ.31,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடைசியாக பெப்ரவரி 2018 இல் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இது ரூ.50,000 இலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது.

பெப்ரவரி 2018 வரை, எம்.பி.க்களின் சம்பளத்தை திருத்துவதற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருந்தது. பின்னர், நிதிச் சட்டம், 2018 மூலம், வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், நாளாந்தக் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியத்தை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அதிகரிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954 ஐ நாடாளுமன்றம் திருத்தியது.

ஏப்ரல் 2020 இல், கோவிட் தொற்றுநோய் காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் குறைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles