இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் குற்றங்களுக்காக நான்கு கனடியர்கள் சீனாவால் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கொலைகளை மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித கண்ணியத்திற்கு முரணானவை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மரணதண்டனைகளைத் தவிர்ப்பதற்கான நானும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கடந்த மாதங்களில் தலையிட்டு சீனாவிடம் கருணை கோரியதாக அமைச்சர் மெலானி ஜோலி கூறினார்.
இறந்தவர்களின் குடும்பங்களுடன் அரசு அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக ஜோலி தெரிவித்தார்.
கனடாவில் உள்ள சீனத் தூதரகம் சமீபத்திய மாதங்களில் சீனாவில் கனேடிய குடிமக்கள் தூக்கிலிடப்பட்டதை உறுதிப்படுத்தியது. ஆனால் எத்தனை பேர் என்பதைக் கூற மறுத்துவிட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரணதண்டனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறியது.
சீனா ஒரு சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடு. சீனாவின் சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தின்படி பொறுப்பேற்க வேண்டும் என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றம் என்பது சமூகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு கடுமையான குற்றமாகும், மேலும் அனைத்து நாடுகளிலும் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். சீனா எப்போதும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.
தூக்கிலிடப்பட்ட கனடியர்களுக்கு நியாயமான விசாரணை மற்றும் உரிய நடைமுறை வழங்கப்பட்டதாக அந்தத் தூதரகம் தனது கருத்தில் தெரிவித்துள்ளது.
வழக்குகளில் தொடர்புடைய கனேடிய பிரஜைகள் செய்த குற்றங்களின் உண்மைகள் தெளிவாக உள்ளன. மேலும் சான்றுகள் உறுதியானவை மற்றும் போதுமானவை. சீன நீதித்துறை அதிகாரிகள் சட்டத்தின்படி வழக்குகளைக் கையாண்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட கனேடிய பிரஜைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை முழுமையாக உத்தரவாதம் செய்துள்ளனர் என்று அதன் தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒட்டாவா சீனாவின் நீதி அமைப்பை சட்டபூர்வமானதாக கருத வேண்டும் என்று தூதரகம் கூறியது.
சட்டத்தின் ஆட்சி மற்றும் சீனாவின் நீதித்துறை இறையாண்மையை மதிக்கவும், பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தவும், சீனாவுடன் ஒரே திசையில் பணியாற்றவும், உறுதியான நடவடிக்கைகளுடன் சீனா-கனடா உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை கூட்டாக ஊக்குவிக்கவும் கனடா தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.