இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தது.
அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
அதற்கமைய, இன்று பிற்பகல் வரை ஆட்சேபனைகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுமிருந்தது.
இலங்கை முழுவதுமுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
எனினும் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசசபைகளிற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.