இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாபில் , பயிர்களுக்கு சிறந்த விலை கோரி ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வரும் நூற்றுக்கணக்கான விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அதிகாரிகள் அவர்களின் தற்காலிக முகாம்களை அகற்ற புல்டோசர்களையும் பயன்படுத்தினர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலையில் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் போராட்டத் தலைவர்களான சர்வான் சிங் பாந்தர் மற்றும் ஜக்ஜித் சிங் தல்லேவால் ஆகியோர் அடங்குவர். பல மாதங்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தல்லேவால், ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.
எந்த எதிர்ப்பும் இல்லாததால் நாங்கள் எந்த பலத்தையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி நானக் சிங் தெரிவித்தார். விவசாயிகள் நன்றாக ஒத்துழைத்தனர் அவர்களே பேருந்துகளில் அமர்ந்தனர்.
முழு சாலையும் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படும். ஹரியானா காவல்துறையும் தங்கள் நடவடிக்கையைத் தொடங்கும்” என்று சிங் தொலைக்காட்சி செய்தி சேனலான NDTVயிடம் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கூடாரங்களையும் மேடைகளையும் இடிக்க போலீசார் புல்டோசர்களைப் பயன்படுத்துவதை காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கக் கோரி ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைநகர் புது தில்லிக்கு அவர்கள் மேற்கொண்ட போராட்ட பேரணி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் அண்டை மாநிலமான ஹரியானாவின் எல்லையில் முகாமிட்டு, நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல், விவசாயத் தலைவர்களும் அரசாங்கமும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்; இருப்பினும், எந்த முடிவும் எட்டப்படவில்லை .
விவசாயத் தலைவர்களுக்கும் மத்தியக் குழுவிற்கும் இடையிலான ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை முடிவடைந்தது, அடுத்த கூட்டம் மே 4, 2025 அன்று நடைபெற உள்ளது.
ஒருபுறம், அரசாங்கம் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, மறுபுறம், அவர்களைக் கைது செய்கிறது” என்று பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயி குழுவின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.