தேர்தல் நடைபெறாதென முன்னர் அறிவிக்கப்பட்ட பூநகரி மற்றும் மன்னார் பிரதேசசபைகளிற்கான தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 3 பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கே அவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அத்துடன் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (20) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட 3 பிரதேச சபைகளுக்கும் கட்டுப் பணம் செலுத்துதல், வேட்புமனுத் தாக்கலுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.