உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு (தாக்கல் செய்வதற்கான கால எல்லை அண்மிதுள்ள நிலையில் பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள்) தாக்கலின் போது, அவை நிராகரிக்கப்படும் காரணங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, வேட்புமனு (பெயர்குறித்த) நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்படுதல்
1. அதிகாரமற்ற நபரொருவர் கையளித்திருத்தல்
2. உரிய வேட்பாளர்களின் எண்ணிக்கை காணப்படாமை அல்லது உரிய எண்ணிக்கையை விட கூடுதலான வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட்டிருத்தல்
3. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் அல்லது சுயேச்சைக் குழுவொன்றினால் வைப்புப் பணம் வைப்புச் செய்யப்படாமை
4. கட்சிச் செயலாளரினால் அல்லது சுயேச்சைக் குழுத் தலைவரினால் கையொப்பமிடப்படாமை
5. கட்சிச் செயலாளரின் அல்லது சுயேச்சைக் குழுத் தலைவரின் கையொப்பம், சமாதான நீதவான் அல்லது பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்படாமை
6. உரிய இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கையும், இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் உள்ளடங்காமை
7. இளம் வேட்பாளரொருவரின் பிறப்புச் சான்றிதழின் அத்தாட்சிப்படுத்திய ஒரு பிரதி, பிறந்த திகதியை வெளிப்படுத்துகையொன்று சமர்ப்பிக்கப்படாமை அல்லது குறைபாடுகள் சகிதம் சமர்ப்பிக்கப்பட்டிருத்தல்
8. வேட்பாளரொருவர் பெயர்குறித்த நியமனப் பத்திரத்தில் கையொப்பமிடாமை
9. அரசியலமைப்பிற்கான ஏழாம் அட்டவணையிலுள்ள சத்தியம்/உறுதியுரை காணப்படாமை அல்லது குறைபாடுகள் காணப்படுதல்
10. பெயர்குறித்த நியமனப்பத்திரத்தில் ஒரு பெயர் மாத்திரம் நிராகரிக்கப்படுகின்ற போது, அவ்வாறு நீக்கப்படுகின்ற வேட்பாளர் இளம் (ஆண்/பெண்) அல்லது பெண் வேட்பாளரெனின், ஆகக் குறைந்த இளம் அல்லது ஆகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவம் நிச்சயப்படுத்த முடியாதிருப்பின், அச்சந்தர்ப்பத்தில் முழு பெயர்குறித்த நியமனப் பத்திரமும் நிராகரிக்கப்படுகின்றமை
11. பெயர்குறித்த நியமனப் பத்திரத்தில் ஒரு பெயர் மாத்திரம் நிராகரிக்கப்படுகின்ற போது, ஆகக் குறைந்த இளம் மற்றும் பெண் பிரதிநிதித்துவத்திற்கு தடைகள் ஏற்படாதிருப்பின், குறித்த வேட்பாளரது பெயரை மாத்திரம் நிராகரிக்க முடிகின்றமை
இச்சந்தர்ப்பங்களின் போது தகைமையற்றவரெனக் கண்டறியப்பட்ட வேட்பாளரின் பெயர் மாத்திரம் பெயர்குறித்த நியமனப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்தப் பெயருக்குப் பதிலாக வேறு பெயரொன்றைப் பதிலீடு செய்வதற்கான உரிமை இல்லையென்பதோடு, வேட்பாளர் சார்பாக
வைப்புச் செய்யப்பட்ட வைப்புப் பணம் அரசுடமையாக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.