போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என இந்திய மீனவர்களிடம் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினார்.
இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை. இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை.
அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. எமது கடல்எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர்.
இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலவனம் ஆகக்கூடும் என தெரிவித்தார்.