தமிழரசை பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரசாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர்.
இந்த அடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.
தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது.
இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லலை. யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை. எமது கட்சியின் யாப்பிற்கமைய தான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம் என்றார்