மாற்றங்களை கொண்டுவரப்போவதாக சொல்லி வந்த தேசிய மக்கள் சக்தி முன்னைய ஆட்சியாளர்களை போன்றே மலின அரசியலில் களமிறங்கியுள்ளது. உள்ளுராட்சி சபை தேர்தல்களிற்கு வீதி அமைப்பு போன்ற விளம்பரங்களை மலின அரசியலாக தேசிய மக்கள் சக்தியும் கையில் எடுத்துள்ளது.
மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழமை மூன்றாவது தடவையாக இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கேற்றி ஆரம்பித்து வைத்த வீதி அங்குரார்ப்பண நிகழ்வுகள் மீண்டும் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
அங்கு உரையாற்றிய ஆளுநர் ஜனாதிபதி அநுரகுமார அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு வருகைதந்தபோது, வடக்கு மாகாணத்தில் வீதிகளின் புனரமைப்புக்கு எவ்வளவு நிதி வேண்டும் என்றுதான் கேட்டார்.
அதன் பின்னர் வடக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்திக்காக 1,500 கிலோ மீற்றர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு மாத்திரம் 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஆண்டுகளிலும் எஞ்சிய வீதிகளின் புனரமைப்புக்கு நிதி கிடைக்கும். அந்த நிதிக்கு மேலதிகமாக விசேடமாக இந்த வீதியும், தொண்டைமனாறு – பருத்தித்துறை வரையிலான வீதியும் புனரமைப்புச் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.