உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆசனங்கள் கிடைக்காத நிலையில பரஸ்பரம் கட்சி மாற்றங்கள் உச்சம் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோன்று யாழ்ப்பாணத்திலும் முன்னாள் தவிசாளர் ஒருவர் தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து மாற்று கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம்; தனது மகன் சகிதம் தமிழரசு கட்சி பக்கம் பாய்ந்திருந்தார்.
அடுத்து வருகின்ற நாட்களில் மேலும் பல பாய்ச்சல்கள் இடம்பெறலாமென தகவல்கள் வெளியாகிவருகின்றது.
இதனிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் (12.03) புதன்கிழமை மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.