இந்திய முதலீட்டாளர் அதானியுடன் முரண்பட அனுர அரசு தொடர்ந்தும் பின்னடித்தே வருகின்றது.அதானியுடனான ஒப்பந்தம் இதுவரை இரத்து செய்யப்படவில்லையென அனுர அரசு அறிவித்துள்ள நிலையில் திட்டத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியின்படி செயல்பட அரசாங்கம் தயாராக இருந்தால், 484 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை தமது நிறுவனம் மீண்டும் தொடங்கலாம் என்று அதானி கிரீன் எனர்ஜி இலங்கை எரிசக்தி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருட நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் கட்டணங்களுக்கான ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட், 484 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்தையும், தொடர்புடைய பரிமாற்ற இணைப்புகள் மின் விநியோக வலையமைப்பு விரிவாக்கத் திட்டங்களையும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முடிக்க முயற்சித்ததாக எரிசக்தி அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் முடிவுக்காக பொறுமையாகக் காத்திருந்த போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்தொடர்புகளும் இல்லாத காரணத்தால், மன்னார் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி இலங்கை நிறுவனம் எரிசக்தி அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது.
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதும் பூநகரி கௌதாரிமுனை திட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பும் வெளியிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.