புதிய அரசிற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்க முற்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக்கோரியும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும் யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
போராட்டத்தில் மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்களான வசந்த முதலிகே, ராஜ்குமார் ரஜீவ்காந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசன், பௌத்த தேரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர்கள், மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அதேவேளை, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பேரணியானது நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து கிட்டுப்பூங்கா வரை நடைபவனியாக சென்றிருந்தது. .
“பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குக, பாலியல் குற்றங்களை துரிதமாக விசாரிக்க நடமாடும் நீதிமன்றங்களை உருவாக்குக, பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரச புலனாய்வாளர்கள் மிரட்டுவதை நிறுத்த கோரி பேரணியில் கோசங்கள் முன்னெடுக்கப்பட்டது.
பேரணியில் யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மகளிர்கள் கலந்துகொண்டனர்..