பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்தைத் தாக்கி அதில் பயணித்த பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.
குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தொடருந்து மீது பலூச் விடுதலை இராணுவம் (BLA) துப்பாக்கிச் சூடு நடத்தியது.
தொலைதூர சிபி மாவட்டத்தில் தொடருந்தைத் தாக்குதவற்கு முன்னர் தண்டவாளத்தில் குண்டுவீசித் தாக்கியதாகக் கூறியது. தொடருந்து தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியது.
தொடருந்து ஓட்டுநர் உட்பட குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாக பாகிஸ்தான் காவல்துறையினர் உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பணயக்கைதிகளை மீட்க பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உலங்கு வானூர்திகளும் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குவெட்டாவிலிருந்து பயணித்த 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தொடருந்தில் பயணித்துள்ளனர். இதுவரை 182 பேரை அவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்னர்.
பணயக் கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் இராணுவம் ஏதாவது செய்தால் அவர்களைக் கொன்றுவிடுவோம் என பலூச் விடுதலை இராணுவம் எச்சரித்தது.
பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் பலூச் விடுதலை இராணுவத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
இவர்களுக்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.