கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு வருகை தருவோர் தமது முழுமையான விபரங்கள் தொடர்பான பிரதிகளை கொண்டுவருமாறு மாவட்ட செயலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளர் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் – யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் – யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் – நெடுந்தீவு, பிரதேச சபை – நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் எதிர்வரும் 14ஆம் மற்றும்15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி முதல் மு.ப 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1300 ஆகும்.
கச்சதீவுக்கு குழுவாக / தனியாக வருகை தரும் மக்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வெளிமாவட்டங்களிலிருந்து தமது சொந்த படகுகளில் திருவிழாவுக்கு செல்வோர் தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 14ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவு மற்றும் 15ஆம் திகதி காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.
அதேவேளை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாட்டை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.