Home இலங்கை முச்சக்கர வண்டி விபத்து – குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி விபத்து – குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

by ilankai

புத்தளம் – கற்பிட்டி, தலவில பகுதியில் இருந்து மினுவாங்கொடைபகுதியை நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டி ஒன்று மாதம்பை – கலஹிடியாவ பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் ராகம மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதுடைய தாயும், அவரது 1 வயதுடைய குழந்தையும், 36 வயதுடைய உறவினர் முறை பெண்ணொருவருமாக மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இடம்பெற்ற போது, குறித்த முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 9 பேர் பயணித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கற்பிட்டி – தலவில தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்ட பின்னர், மீண்டும் தலவில பகுதியில் இருந்து மினுவாங்கொடை பகுதிக்கு டீசல் ரக முச்சக்கர வண்டி ஒன்றில் சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles