தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில் கிளிநொச்சியில் சி.சிறீதரன் தனது ஆதரவாளர்களை சுயேட்சையாக களமிறக்க தயராகிவருகின்றார்.
உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழரசுக்கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
கூட்டங்களில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுவருவதுடன் அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
பெண்கள் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி தொடர் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
இதனிடையே தேர்தல் அறிவிப்பின் போது வழக்குகள் காரணமாக கைவிடப்பட்ட பூநகரி பிரதேசசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.