தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தை மெல்ல மெல்ல கொழும்புக்கு மாற்றி அதன் தலைமைப் பதவியை கைப்பற்றும் இலக்குடனேயே எதிர்வரும் உள்;ராட்சித் தேர்தலில் கட்சியை அங்கு களமிறக்கும் முடிவில் சுமந்திரன் தீவிரமாக இருப்பதாக கட்சி மட்டத்தில் கருத்து நிலவுகிறது.
அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கப்போன இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மூக்குடைபட்டு நின்ற காட்சி, வரப்போகும் உள்;ராட்சிச் சபைக்கான தேர்தல்களில் போட்டியிட அபேட்சகர்களைத் தேடியலையும் தமிழ் அரசியல் கட்சிகளின் துர்ப்பாக்கிய நிலை ஆகிய இரண்டுமே இப்போது இலங்கை அரசியலில் முக்கியமாகப் பேசப்படுபவை.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை கிழட்டு நரி என்பார்கள். இவரது பெறமகனான ரணிலை குள்ளநரி என்று அழைப்பார்கள். அல் ஜசீரா தொலைக்காட்சி; செவ்வியின் பின்னர் ரணிலை வாலறுந்த நரியாகவே காண முடிகிறது.
இலங்கையிலுள்ள உள்நாட்டுத் தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் ரணில் செவ்வி வழங்கும்போது, இங்குள்ள ஊடகர்கள் மிகப் பவ்வியமாக அடக்கமாக வினாக்களைத் தொடுப்பர். ஊடக அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து கொண்டு இவர்களால் வீரியமாக வினாக்களைத் தொடுக்க முடியாது. சிலசமயம் தெரிந்தெடுத்த விடைகளைச் சொல்வதற்காகவே வினாக்கள் தொடுக்கப்படுவதுமுண்டு. இதனால், பதிலளிக்கும் ரணில் பலமான ஒருவராக பிம்பம் காட்டப்படுவார்.
இந்த விளையாட்டு அல் ஜசீராவில் பலிக்கவில்லை. தம்மிடம் இரண்டு மணித்தியாலங்கள் எடுத்த செவ்வியை அல் ஜசீரா தங்களுக்கு ஏற்றாற்போல வெட்டியும் கொத்தியும் ஒரு மணித்தியாலத்துக்குக் குறைத்ததாகவும், தாம் தெரிவித்த பல முக்கிய விடங்கள் ஒளிபரப்பப்படவில்லையென்றும் ரணில் சொல்லும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
எதுவானாலும், போர்க்கால பல உண்மைகளை மறைக்க முடியாத நிலையில் முக்கித்திணறி ஒப்புக்கொண்ட ரணிலை அல் ஜசீரா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. உனது வயதிலும் பார்க்க எனது அரசியல் அனுபவம் கூடுதலானது என்றும் ரணில் சொல்லிப் பார்த்தார். நான் இடையில் எழுந்து போய்விடுவேனென்றும் வெருட்டிப் பார்த்தார். எதுவுமே இங்கு எடுபடவில்லை.
இந்தச் செவ்வி ஊடாக வெளிவந்த விடயங்களில் முக்கியமான ஒன்று, போர்க்காலத்தில் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதென்பதை ரணில் ஒப்புக்கொண்டமை. ஆனாலும் அதனைக்கூட திட்டமிட்ட தாக்குதல்கள் அல்ல என்றே சமாளிக்கப் பார்த்தார். மருத்துவமனைகள் மீது இலக்கு வைத்து ஷெல் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டமையை போர்க்காலத்தில் அங்கு கடமையாற்றிய மருத்துவர்களான சத்தியமூர்த்தி, வரதராஜா போன்றோர் உடனுக்குடன் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்ததை இலகுவாக மறுக்க முடியாது.
காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி தடுக்கப்பட்டதையும் ஒருவாறு ஒப்புக்கொண்ட ரணில் அந்தத் தாக்குதல்கள் குறைந்தளவில்தான் நடைபெற்றதாக கூறினார்.
போர்க்காலக் குற்றவாளியாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருக்கும் இராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையென மகாபொய் ஒன்றை ரணில் இங்கு அவிழ்த்துவிட்டார். கோதபாயவின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டபோது நடவடிக்கை எடுக்காமல் விட்டும், அவர் நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கும் சவேந்திர சில்வாவே காரணமாக இருந்ததால்தான் தாம் ஜனாதிபதியாக முடிந்தது என்ற நன்றி உணர்வுடன் ரணிலால் அவர் குற்றமற்றவர் என்று கூற முடிந்தது என்பது புரிகிறது.
நாய் எங்கு காயப்பட்டாலும் காலைத் தூக்கிக்கொண்டே ஊளையிடுவதுபோல அல் ஜசீரா செவ்வியின்போது விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும் இருந்ததாக ரணில் சொன்னபோது அதனை எவரும் பொருட்படுத்தவில்லை. மொத்தத்தில் இந்தச் செவ்வி காலம் கடந்த பின்னராவது ரணிலை சில விடயங்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறது. அவர் வாயால் உண்மைகளை வரவழைத்தமைக்காக அல் ஜசீராவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டபோது அத்தேர்தலை வடக்கு கிழக்குவாழ் தமிழர்கள் பகிஷ்கரித்து அவரைத் தோற்கடிக்கச் செய்ததை இப்போதாவது பலரும் சரியென ஏற்றுக்கொள்ளக்கூடும்.
இனி, உள்ளூராட்சிச் சபைத்தேர்தலைப் பார்ப்போம். தெற்கில் வேட்பாளர்கள் தெரிவு மும்முரமாக இடம்பெறுகிறது. மகிந்தவின் பெரமுனவுக்கும், அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்திக்குமிடையில் போட்டி கடுமையாக இருக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இளையோரை களமிறக்குவதில் இருதரப்பும் தீவிரமாக உள்ளது. ரணில், சஜித் ஆகியோரின் அணியினர் இன்னமும் இழுபறியில் நிற்கின்றனர். ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தெரிவுக்கு பொறுப்பாகவுள்ளார். அநுர குமாரவிடம் பரப்புரை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழர் தரப்பு நிலைமை கடந்த பொதுத்தேர்தல்போல அபேட்சகர் தெரிவில் தடுமாறுகிறது. கூட்டும் சரிவரவில்லை, கூட்டணியும் சரிவரவில்லை. ஒன்பது பேர் கூட்டு ஐந்துக்கு இறங்கியுள்ளது. டயஸ்பரா வழங்கும் பணத்தை நம்பி சில அணிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. தமிழரசுக் கட்சிக்கு தலைவர்கள் பலர் என்பதால் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கிறது. பார்க்கப் போனால் பல உள்ளூராட்சிச் சபைகளும் சிதறலாகவே தேர்தலை சந்திக்கும்போல் தெரிகிறது. முடிவுகளும் அவ்வாறே அமையலாம்.
கூட்டமைப்பிலிருந்து பிரிந்து போனவர்களை வருமாறு பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்தார். தமிழரசின் மத்திய குழுவைக் கூட்டி முடிவெடுத்தபின் அறியத் தாருங்கள் என்று பதிலளித்தார் புளொட்டின் தலைவர் சித்தார்த்தன். இதனால் சினமடைந்த சீ.வி.கே. தமது வெறுப்பை வெளிப்படுத்தியதோடு, சித்தார்த்தன் தமிழரசை பூர்வீகமாகக் கொண்டவரென்றும் நினைவுபடுத்தி அதற்கேற்ப முடிவெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அரசியலில் இது என்ன பூர்வீகம்? புதிதாக இருக்கிறது. காலஞ்சென்ற உடுவில் எம்.பி. வி.தர்மலிங்கத்தின் புதல்வன் என்பதால் சித்தார்த்தன் தந்தை வழியில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து போட்டியிட வேண்டுமென சீ.வி.கே. எண்ணுகிறார் போலும். அதனால்தான் பூர்வீகம் என்ற பதத்தை இங்கு பயன்படுத்தியிருக்கிறார்.
அரசியலில் பூர்வீகம் என்பது செல்லாக்காசு. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரன் (ரவி ஜெயவர்த்தனவின் மகன்) கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சிறீலங்கா சுதந்திர கட்சியின் ஸதாபகரான பண்டாரநாயக்கவின் புதல்வர் அனுரா பண்டாரநாயக்க தந்தையின் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற சபாநாயகரானவர். அனுராவின் சகோதரியான சந்திரிகா குமாரதுங்கவும் சிறீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக புதுக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டவர். அரசியல் பூர்வீகம் பற்றிக்கூற இன்னும் பல உதாரணங்கள் உண்டு. இப்போதைக்கு இவ்வளவும் போதும்.
வடக்கில் போட்டியிட அபேட்சகர்களைத் தேடித்திரியும் தமிழரசுக் கட்சி, இம்முறை கொழும்பிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் இணைப்பொருளாளர் ஒருவரும், கொழும்புக் கிளையின் முக்கியஸ்தர் ஒருவரும் சேர்ந்து சுமந்திரனோடு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் என்ன செய்வதென்று புரியாது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
கொழும்பு உள்;ராட்சிச் சபையில் போட்டியிடுவதென்றால் குறைந்தது நூறு அபேட்சகர்கள் வேண்டும். அவர்களை எங்கே தேடிப்பிடிக்கப் போகிறார்கள். கொழும்பில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் என்ன காரணத்தாலோ தெரியாது ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். மனோ கணேசன் அணியினர் உட்பட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில தமிழ் பிரமுகர்கள் ஏற்கனவே கொழும்பில் வெற்றி பெற்று வந்துள்ளனர். இவர்கள் எவரும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது. இவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதால் இங்கு வழமையாகப் போட்டியிடும் தமிழர் அணிகளின் வெற்றியைப் பாதிக்கும். அத்துடன் வழமையான தமிழர் பிரதிநிதித்துவம் கொழும்பில் இழக்கப்படும். இதனை தெற்கின் சிங்களக் கட்சிகள் நிச்சயமாக வரவேற்பர்.
இதனைத் தெரிந்து கொண்டும் தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுகிறதென்றால் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் இலக்கு ஒன்று உண்டு. எதிர்காலத்தில் கட்சியின் இயங்குதளத்தை கொழும்புக்கு மாற்றுவதற்கான திட்டம் இதற்குள் ஒளிந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் முக்கிய முடிவுகள் பல வருடங்களாக கொழும்பின் அல்பிரட் ஹவுஸ் ஹார்டனிலிருந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் இல்லத்திலேயே கூடி எடுக்கப்பட்டு வந்தது. டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், முன்னாள் அமைச்சர் எம்.திருச்செல்வம் போன்றோர் கொழும்புவாசிகளாக இருந்ததால் இந்த நடைமுறை வசதியாக இருந்தது. அதேசமயம் யாழ்ப்பாண நகரில் தமிழரசுக் கட்சி அலுவலகம் ஒன்றும் இயங்கி வந்தது.
வரப்போகும் உள்;ராட்சித் தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை போட்டியிடுவது என்ற முடிவு, கட்சியின் இயங்குதளத்தை மெதுவாக கொழும்புக்கு மாற்றுவதற்கானது. அதனூடாக கட்சியின் தலைமைப் பதவியை கொழும்புவாசியான சுமந்திரன் கைப்பற்றிக்கொள்வது என்பது ஓரளவுக்கு கட்சியின் முக்கியமானவர்களுக்கு தெரியவந்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடத்தை மாற்றினால் கொழும்பு அரசியலுக்கேற்றதாக எக்கராஜ்ய அரசியல் கொள்கையை மையப்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளை மழுங்கடித்து விடுவது இலகுவாகி விடும். இதற்கு தமிழரசின் மத்திய குழு சம்மதித்துள்ளதா? பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இவ்விடயத்தில் நிதானமாக முடிவெடுக்க வேண்டுமென கட்சியிலுள்ள பலரும் எதிர்பார்க்கின்றனர்.