முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை சனிக்கிழமை (08) முன்னெடுத்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டமானது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக சென்று வட்டுவாகல் பகுதியில் இறுதியாக கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வரை சென்று போராட்டம் நிறைவடைந்திருந்தது.
கவனயீர்ப்பு போராட்டத்தின் போது சர்வதேசமே பதில் சொல், சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன! , பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம். கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும், தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு ,போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வட்டுவாகல் விகாரைக்கு செல்லும் வழியில் அதிகளவவான காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டடிருந்தமையும் குறிப்பிடதக்கது.