Home திருகோணமலை 9 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை: திருமலை புல்மோட்டையில் போராட்டம்!

9 மாதங்கள் ஊதியம் வழங்கவில்லை: திருமலை புல்மோட்டையில் போராட்டம்!

by ilankai

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை (07) காலை நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும், நியமனத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறுவனத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் கடந்த வருடம் சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட குறித்த ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கடமையாற்றும் குறித்த ஊழியர்களில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 34 பேரும், யூலை மாதம் 46 பேரும் அமைய அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 34 பேருக்கு 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்பட்டும் ஏனையவர்களுக்கு இதுவரை எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்ததைகள் நடத்தியும் சம்பளம் வழங்கப்படாத நிலையில் கடந்த மாதம் புல்மோட்டைக்கு வருகைதந்த கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் சுணில் ஹந்துநெத்தியுடனான பேச்சுவார்த்தையின்போது பொது முகாமையாளரினால் பெப்ரவரி மாதமே சம்பளம் வழங்கப்படும் என கூறிச் சென்றார். 

இந்நிலையில் இது தொடர்பாக நிர்வாகத்துடன் பேசியபோது நியமனத்தை நாள் சம்பள அடிப்படையில் மாற்றி நாளாந்த கூலி அடிப்படையில் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியப்படுத்தபட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில் அதனை எதிர்த்தும் சம்பளம் வழங்கக் கோரியும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தமக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் இதை தொடரவிருப்பதாகவும் குறித்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள குறித்த நியமனங்கள் அதன் அனுமதியளிக்கப்பட்ட ஆளனிக்கு மேல் இருப்பதாகவும் இதனால் குறித்த சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் உள்ளீர்ப்பு செய்வதில் சிரமங்கள் இருப்பதாகவும் எனினும் மனிதாபிமான அடிப்படையில் குறித்த நபர்களை ஏதோ ஒரு வகையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

Related Articles