மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின் விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவான மீனவர்கள் உள்ளார்கள். அத்துடன் மீன்பிடி மற்றும் அதனுடனான தொழில்களில் அதிகளவானோர் ஈடுபடுகிறார்கள். வடக்கு பகுதியில் வாழும் மீனவர்கள் கஸ்டமான வாழ்க்கை முறைமையில் தான் உள்ளார்கள். கடற்றொழிலை மேம்படுத்துவதை போன்று அந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டுமென தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.