Home யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழாம் விஜயம்

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழாம் விஜயம்

by ilankai

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் குழாம் நேரில் விஜயம் மேற்கொண்டு , தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். 

 கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் மற்றும் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ். மாவட்ட செயலாளர் பிரதீபன், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் சீமேந்து தொழிற்சலையை பார்வையிட்டனர்.

1950 களில்  ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சாலை போர் காரணமாக 1990 களில் மூடப்பட்டது. அன்று தொடக்கம் கடந்த 35 வருட காலமாக தற்போதுவரையில் இயங்கா நிலையில் காணப்படுகிறது.   

மீண்டும் தொழிற்சாலையை, சீமெந்து உற்பத்திக்கென ஆரம்பிப்பதற்கு பல சவால்கள் உள்ள நிலையில் இன்றைய தினம் அமைச்சர் குழாம் நேரில் சென்று அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

சீமெந்து தொழிற்சாலையாக அல்லாமல், வடக்குக்கு பொருளாதார பலன் தரக்கூடிய வேறு திட்டங்களை இங்கு செயல்படுத்தலாமா? என்பது பற்றியும் அதன் போது கலந்துரையாடப்பட்டது.

உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

Related Articles