கச்சதீவு பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என ஆயிரம் பேருமாக 9 ஆயிரம் பேர் வருகைதரவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் பேச்சுகளின் பின்னர் ஊடகங்களிடையே பேசிய மாவட்ட செயலர் தங்களால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கச்சதீவில் சமர்ப்பிப்பதன் மூலம் பக்தர்கள் தமது பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தார்.
வருகை தரும் பக்தர்களிற்கான உணவு தங்குமிட வசதிகள் கடற்படையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இம்முறை விசேடமாக 25 சாரணர்கள் கச்சதீவு ஆலய பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
இலங்கையின் வேறு பிரதேசங்களில் இருந்து நேரடியாக பக்தர்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் அந்தந்த பகுதி ஆயர் இல்லங்கள் மூலம் அறிவுறுத்தலை வழங்கி வரும் பொழுது பாதுகாப்பு ஏற்பாடுகளை கடற்படையினரால் செய்ய முடியுமெனவும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.