Home யாழ்ப்பாணம் யாழில். கைது செய்யப்படும் நபர்களை விடுவிப்பதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் அதிகாரியின் மகன்

யாழில். கைது செய்யப்படும் நபர்களை விடுவிப்பதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் அதிகாரியின் மகன்

by ilankai

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் , பொலிஸ் நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில்  யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள்  கிடைக்கப் பெற்றுள்ளது. 

அண்மையில் மது போதையில் முச்சக்கர வண்டியை ஓட்டிய சாரதியை வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸார் கைது செய்திருந்தனர், 

குறித்த நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லாது , பொலிஸ் நிலையத்தில் வைத்தே விடுவிக்க முடியும் என கூறி முச்சக்கர வண்டி சாரதியின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை குறித்த நபர் பெற்றுள்ளார். 

அந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , விசாரணைகளின் பின்னர், குறித்த திகதியில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனும் நிபந்தனையுடன்  பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்தனர். 

அதனை அடுத்து பணத்தினை வழங்கியவர்கள் , நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றமை தொடர்பில் தெரிவித்த போது,  பணத்தினை பெற்ற நபர் , நீதிமன்றில் வழக்குகள் சுமூகமாக முடியும். தான் அனைத்து விடயங்களையும் கவனித்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார். 

அதனை நம்பி நீதிமன்றம் சென்றவருக்கு நீதிமன்றினால் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன் , ஒரு மாத காலத்திற்கு சாரதி அனுமதி பத்திரமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பணம் கொடுத்த நபரை தொடர்பு கொண்டு கேட்ட போது , தாம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே எடுத்து விடுவதற்காகவே பணம் வாங்கியதாக கூறியுள்ளார். 

அது தொடர்பில் பணம் கொடுத்தவர்கள் யாழ்ப்பாண பொலிசாரிடம் கேட்ட போது , மது போதையில் வாகனம் செலுத்திய நிலையில் கைது செய்தவர்களை, அவர் சார்பில் யாராவது பொலிஸ் நிலையம் வந்து , அடையாள அட்டை பிரதி ஒன்றினை வழங்கி பொலிஸ் நிலையத்தில் வைத்தே பிணை எடுத்து செல்ல முடியும். அதற்காக பொலிஸாருக்கு பணம் வழங்க தேவையில்லை என கூறி , யாரிடம் பணம் வழங்கினீர்கள் என கேட்ட போது பொலிஸ் உயர் அதிகாரியின் மகனிடம் என கூறியுள்ளார். 

அதனை அடுத்து , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் மாத்திரமே தாம் நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸார் கூறியதை அடுத்து, அந்நபர் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் குறித்த அதிகாரியின் மகன் , தனது தந்தையின் பொலிசாரின் உத்தியோகபூர்வ ரீ. சேர்ட் அணிந்தவாறு பலரிடம் இவ்வாறு பணம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. 

பொலிஸ் ரீ சேர்ட்டுடன் பொலிஸ் நிலையத்தினுள் மகன் நடமாடி திரிந்ததை பல தடவைகள் பொலிஸார் கண்டுள்ள போதிலும் உயர் அதிகாரியின் மகன் என்பதால் அது தொடர்பில் பொலிஸார் சந்தேகம் கொள்ளவில்லை.

தற்போது விசாரணைகளில் , குறித்த நபர் பொலிஸ் நிலையங்களில் நடமாடி , அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட வரும் நபர்களை , எதற்காக கைது செய்துள்ளார்கள் என வினாவி , அந்த வழக்குகளை சுமூகமாக முடிக்க உதவுவதாக கூறி பணம் பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸ் ரீ சேர்ட்டுடன் அந்நபர் காணப்பட்டமையால் , அவரையும் பொலிஸார் என்றே பலர் கருதி பணத்தினை கொடுத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அதேநேரம் பணத்தினை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி தனது மேல் மட்ட அதிகாரிகள் பலரிடமும் இந்த சம்பவத்தினை சுமூகமாக முடிக்க பேச்சுக்களை நடாத்திய போதிலும் , முறைப்பாட்டின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு உயர் மட்டம் பணித்துள்ளது. 

இந்நிலையில் பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related Articles