Home சிறப்புப் பார்வை தேர்தலில் வெற்றி பெறவென கூறுபோட்டு விற்பனை செய்ய தமிழ்த்தேசியம் கடைச்சரக்கா? பனங்காட்டான்

தேர்தலில் வெற்றி பெறவென கூறுபோட்டு விற்பனை செய்ய தமிழ்த்தேசியம் கடைச்சரக்கா? பனங்காட்டான்

by ilankai

தேர்தல் வெற்றிக்காக தமிழினத்தைக் கூறுபோட்டு மேடையேறிக் கடை விரிப்பதற்கு தமிழ்த் தேசியம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை புரிந்து கொள்ளத் தவறினால், தமிழர் தாயக மக்கள் இலங்கைத் தேசியத்துக்கு தங்களை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.  

தமிழர்கள் கேட்கும் தனிராச்சியத்தை அவர்களிடம் கொடுத்துவி;ட்டால் நாங்கள் நிம்மதியாக இருக்கலாம். அவர்கள் தங்களுக்குள் அடிபட்டு கூறுபோட்டு முடித்துவிடுவார்கள் என்று பதவிகள் இழந்திருக்கும் சிங்களத்தலைவர் சொன்னது ஒரு காலத்தில் பிரபல்யமாகப் பேசப்பட்டது. அவரே பின்னர் புலிகளை முடித்துவிட்டோம் என்று சொல்லி விமான நிலைய மண்ணைத்தொட்டு கும்பிட்ட படமும் ஊடகங்களில் பவனி வந்தது. 

புலிகளை முடித்துவிட்டோம் என்று அன்று சொல்லியவரை இன்று அவரது மக்களே செல்லாக்காசாக பார்க்கிறார்கள். அவரது சகோதரர்களின் முகங்களை எங்கும் காணவில்லை. தமது அரசியல் வாரிசாக முதல் மகன் நாமலை கொண்டுவர நாளும்தோறும் அவர் படும்பாடு பெரும்பாடு. 

குடியிருக்கும் அரச பங்களாவை விட்டு எத்தனை தடவை விலகச் சொல்லி சொன்னாலும் அடாத்தாக இருக்கிறார். அரசாங்க உண்டியலுக்கு செல்ல வேண்டிய கோடானுகோடி பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியதற்காக நடைபெறும் விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் என்கிறார். மூன்று புதல்வர்களில் இருவர் புலன்விசாரணைக்கு படியேறி வருகின்றனர். இது போதாதென்று அவருக்கான பாதுகாப்பும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

புலிகளை முடித்துவிட்டோம் இனி அச்சமில்லை என்று 2009ல் கூறியவருக்கு இப்போது புலிகளால் உயிராபயம் என்று மேலதிக பாதுகாப்பை அவரது அணியினர் கேட்கின்றனர். இதனைக் கூறியே சிங்கள மக்களை உசுப்பேத்த முயல்கின்றனர். ஆனால், ஆயுதங்களின் பலமறிந்த ஜே.வி.பி.யின் அநுர குமாரவுக்கு இதெல்லாம் சும்மா கதை. இதற்கெல்லாம் மசிந்துபோக அவர் தயாரில்லை. 

இதனை எழுதும்போது, தமிழர் தேசிய அரசியலிலும் இதே பாணியில்தான் சில நடைமுறைகள். 2009க்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் அச்சமிருப்பதாகத் தெரிவித்து அவருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

செல்லுமிடமெல்லாம் ராணுவத்தினர் தோழமையோடு அவரருகே திரிந்தனர். காலம்போக அது நீக்கப்பட்டது. அதன்பின்னரும் புலிப்பயம் கூறி பாதுகாப்பு கேட்டபோது, தேர்தல் காலங்களில் தனியாகத் திரிந்தவருக்கு இப்போது எதற்குப் பாதுகாப்பு என்று முன்னாள் கடற்படைத் தளபதியும் அமைச்சருமான சரத் வீரசேகர கேள்வியெழுப்பி அதனைத் தடுத்துவிட்டார். இது சுமந்திரன் பற்றிய கதை. 

அண்மைய சில நாட்களில் வரப்போகும் தேர்தலையொட்டிய செயற்பாடுகளில் இறங்கியுள்ள இவருக்கு இவரைப் பன்னாடை, மாலைகளுடன் வீதிகளில் காண முடிகிறது. ஆனாலும் உயிரபாயம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி மீண்டும் ராணுவப் பாதுகாப்பைப் பெற ஒருவகை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பார்க்;கப் போனால், தெற்கிலும் வடக்கிலும் ஒரே பாணிதான். 

நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்ட சுமந்திரன் தாம் ஒரு சட்டத்தரணியென்றும், அரசியலில் தொடர வேண்டிய தேவையில்லையென்றும் கூறி, புதிய அரசியலமைப்பு வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி அரசியலை விட்டு போய்விடுவேன் என்று கூறிவிட்டு, இன்றும் அதற்குள்ளிருந்தே குத்துக்கரணம் அடித்துக் கொண்டிருக்கிறார். 

தேர்தல் என்று வரும்போது இவர் பற்றிய இன்னுமொரு விடயம் நன்றாக நினைவுக்கு வருகிறது. 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னராக – மே மாதத்தில் சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு நீண்ட செவ்வியொன்றை இவர் வழங்கியிருந்தார். சமுதித்த என்ற ஊடகர் இச்செவ்வியின்போது கேட்;ட ஒரு முக்கிய கேள்வியும் அதற்கான சுமந்திரனின் பதிலும் பின்வருமாறு அமைந்திருந்தது:

கேள்வி: இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா?

பதில்: நிச்சயமாக.

கேள்வி: அந்த ஐம்பத்தெட்டாயிரம் வாக்குகள் (முன்னைய தேர்தலில் பெற்றது) உங்களுக்குக் கிடைக்குமா?

பதில்: அதைவிட இரண்டு மடங்கை என்னால் பெற முடியும். ஒரு லட்சத்துக்கு மேல் எனக்கு வாக்குகள் கிடைக்கும்.

கேள்வி: இது ஒரு சவாலா?

பதில்: சவால்தான்.

கேள்வி: சுமந்திரன் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

பதில்: அவர்கள் எனக்கு வாக்களிக்கவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவே அந்தச் செவ்வியின் இறுதிக் கேள்வி பதிலாக அமைந்திருந்தது. 

2010ல் தேசியப்பட்டியலால் எம்.பி.யாகி, 2015 தேர்தலில் 58,000 வரையான வாக்குகளைப் பெற்ற சுமந்திரன் 2020ம் ஆண்டுத் தேர்தலில் முன்னரில் பார்க்க ஐம்பது வீதமளவில் குறைவாக, 27,843 வாக்குகளை மட்டுமே சிறீதரனின் அனுசரணையால் பெற்று, அதே சிறீதரனுக்கு குழிபறிக்கப் புறப்பட்டு 2024ம் ஆண்டுத் தேர்தலில் படுதோல்வி கண்டவர். 

தெற்கின் சிங்கள ஊடகவியலாளர்கள் வடபகுதி மக்களின் நாடியை அறிந்திருந்த அளவுக்கு, சுமந்திரனால் 2020லும் 2024லும் அறிய முடியாது போனது அவர் முன்னர் ஒருதடவை குறிப்பிட்டதுபோல அவர் தமிழர் தேச அரசியலுக்குத் தகுதியானவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளது. 

கடந்த பதினைந்து வருட தமிழர் அரசியலைத் திரும்பிப் பார்க்கின் சுமந்திரனின் வகிபாகமும் அவரை நம்பி தமிழரசை வழிநடத்திய இரா.சம்பந்தனின் முன்னறிவும் எந்தளவுக்கு தமிழரசுக் கட்சியை மட்டுமன்றி தமிழ்த் தேசியத்தையும் பேரழிவுக்குள் தள்ளியுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இதனாலேயே தமிழரசுக் கட்சிக்கு பதில் தலைவர், பதில் செயலாளர், ஒரு பேச்சாளர், நாடாளுமன்றக் குழுவுக்கொரு தலைவர், அங்கொரு பேச்சாளர் என்று எல்லாமே பதவி மோகமாகியுள்ளது. 

இவ்வாறான நிலையில் உள்;ராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறப் போவதாக வந்திருக்கும் அறிவிப்பு தமிழ்த் தேசியம் என்று தம்மை அறிமுகப்படுத்தும் எல்லோரையும் திணற வைத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் எடுத்த முயற்சிக்கு சிறீதரன் எம்.பி.யின் ஆதரவு  ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அதனை உட்கட்சி மோதல் தடுத்துவிட்டது. பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அடுத்தடுத்து விட்ட அறிக்கைகளும் ஊடக சந்திப்புகளும் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. தமிழரசுக் கட்சி தனித்தே போட்டியிட வேண்டுமென்ற நிலை; சுமந்திரனால் கொண்டுவரப்பட்டுள்ளது, 

மறுபுறுத்தில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். உட்பட ஒன்பது தமிழ் கட்சிகள் கூட்டாக தேர்தலைச் சந்திக்க இணக்கம் கண்டுள்ளதாக செய்தி வெளியான மறுநாளே பசுமை இயக்கம் அதனை மறுத்துவிட்டது. இந்த நேரத்தில் நாடாளுமன்ற வரவு செலவு திட்ட வாக்களிப்பின்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை எதிர்த்து வாக்களிக்க, சிறீதரனின் தமிழரசுக் கட்சிக்காரர் வாக்களிப்பை பகிஸ்கரிக்க, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதனை ஆதரித்து வாக்களித்தார். இத்தோடு இணைப்புகள் என்பது பு~;வாணமானதுபோல் தெரிகிறது. 

நிலைமை சாதகமில்லாததை அறிந்து கொண்ட தமிழரசின் பதில் தலைவர் சுமந்திரன் பாணியில் தமது கட்சி தனித்தே போட்டியிடும் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம் ஒன்பது கட்சி இணைப்பில் பங்குபற்றாத பசுமை இயக்கத்துக்கு ஒரு பிரதேச சபையை ஒதுக்கிக் கொடுத்து அவரை வெல்ல வைப்பதற்கும் ஏற்பாடாகி வருவதாக உள்வீட்டுக்குள்ளேயே பேசப்படுகிறது. 

உள்ளூராட்சிச் சபைத்தேர்தல் நிச்சயமாக நடைபெறுமாயின் அநுர குமார அணி இதற்குள் புகுந்து விளையாடும் உத்தியை கச்சிதமாக செய்யும். கடந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இந்த அணிக்குக் கிடைத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகமாக களத்தில் இறங்கி ஒவ்வொரு சபைகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கைகளை கைப்பற்றுவதற்கு ஏற்பாடாகி வருகிறது.

பாசையூர், வல்வெட்டித்துறை பட்டினங்களில் அநுர குமார பங்குபற்றிய பிரமாண்ட கூட்டங்கள் இதற்கான ஒத்திகை. கடந்த வார வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண பொதுநூலகத்துக்கும் வட்டுவாகல் பாலத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதான அறிவிப்பும் அரசதுறையில் பணிபுரிவோருக்கான அடிப்படைச் சம்பள உயர்வு அறிவிப்பும் ஆட்சித்தரப்பினரின் உள்;ராட்சித் தேர்தலுக்கான விஞ்ஞாபனமாக பார்க்கப்பட வேண்டியவை. 

இவைகளைப் புரிந்து கொள்ளாது தமிழ்த் தேசியம் என்ற சுலோகத்துடன் தேர்தலைச் சந்தித்தால் தங்களுக்கு சில உறுப்பினர் பதவிகளாவது கிடைக்குமென மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்கள், கடந்த பொதுத்தேர்தலில் தாங்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டோம் என்பதை அமைதியாக இருந்து சிந்திக்க வேண்டும். 

தேர்தல் வெற்றிக்காக தமிழினத்தைக் கூறுபோட்டு மேடையேறிக் கடை விரிப்பதற்கு, தமிழ்த் தேசியம் ஒரு விற்பனைச் சரக்கல்ல என்பதை புரிந்து கொள்ளத் தவறினால், தமிழர் தாயக மக்கள் இலங்கைத் தேசியத்துக்கு தங்களை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். இதுதான் நிலைமையாகுமானால் ஊடகர் சமுதித்தவுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் கூறியதுபோல சிங்கக்கொடியும், சிங்களத் தேசிய கீதமுமே தமிழ்த் தேசத்துக்கும் உரிமையாகிவிடலாம். 

Related Articles