விவசாயிகளை ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு ஹொரவப்பதான தேர்தல் தொகுதியில் மக்கள் சந்திப்பொன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. பயிர் சேத இழப்பீடுகளும் கூட இன்னும் வழங்கப்படவில்லை.
நெல்லுக்கு உத்தரவாத விலையும் கிடைத்தபாடில்லை. விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்ளும் இவ் வேளையில் விவசாயிகளின் வாக்குகளால் அரச அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் இன்று விவசாயியை மறந்துவிட்டு செயற்பட்டு வருகின்றனர்.
அண்மைக்காலங்களில் நடந்த அனர்த்தங்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டன. இதன் காரணமாக, ஒரு ஏக்கரில் கிடைக்கும் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. நியாயமான உத்தரவாத விலை இன்னும் கிடைத்தபாடில்லை. ரூ.120 உத்தரவாத விலையானது போதுமானதாக இல்லை. நெல் கொள்வனவு செய்ய 5000 மில்லியன் ரூபா குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொய் சொன்ன தற்போதைய அரசாங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
விவசாயிகளை ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
விவசாயிகளை மட்டுமின்றி அரச ஊழியர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையும் 20,000 சம்பளம் அதிகரிக்கப்படும் என்று தேர்தல் மேடைகளில் தெரிவித்தனர். இவ்வாறு கூறியது நடந்த பாடில்லை. அரச ஊழியர்கள் சம்பள விடயத்தில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
கொலை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இன்று நீதிமன்றங்களில் கூட கொலைகள் இடம்பெற்று வருகின்றன. உயர் பாதுகாப்பு வலயத்திலும் கொலைகள் இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.