Home இலங்கை மீண்டும் வரிசைக்கு போவோம்!

மீண்டும் வரிசைக்கு போவோம்!

by ilankai

திங்கட்கிழமைக்குள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று, இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்றும், அச்சங்கம்  எச்சரித்துள்ளது.

ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தனநாயக்க, இன்று முதல் புதிய விநியோக கோரல்கள் எதுவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படாததால், திங்கட்கிழமைக்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

கடந்த காலங்களில் தமது சங்கம் ஒருபோதும் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றாலும், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீதக் கொடுப்பனவை நீக்கிவிட்டு, அதை புதிய சூத்திரத்தால் மாற்றுவதற்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்துள்ள தற்போதைய முடிவால், வேலை நிறுத்தத்தைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் கூறினார்.

தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததற்காக, CPC தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளரை குற்றம்சாட்டிய சந்தனநாயக்க, பிரச்சினையைத் தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (01) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ. ராஜகருணா தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து செய்வதற்கும், புதிய சூத்திரம் மூலம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்தது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நேற்று (28) முதல் எரிபொருளை முன்பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளதாகக் கூறியது.

இருப்பினும், இந்த முடிவு நாட்டில் எந்த எரிபொருள் நெருக்கடியையும் ஏற்படுத்தாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெறும் கொடுப்பனவை அதிகரிக்கும் அதன் தலைவர் ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “முதல் 15 லோடிங்கிற்கு 6.96 ரூபா கொடுக்கப்படும். அடுத்த 15 லோடிங்கிற்கு 6.62 ரூபாய வழங்கப்படும். இப்போது சுமார் 25 லோடிங்களை செய்பவர்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் தற்போது சுமார் 1 மில்லியன் ரூபாய் வருமானம் பெறுகின்றனர். அதில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பிறகு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.”

“நாம் அறிமுகப்படுத்தும் முறைமையின் ஊடாக , 25 லோடிங் செய்பவர்களுக்கு 6.69 ரூபா கிடைக்கும். “அப்போது அவர்களுக்கு 113,850 கிடைக்கும்.” பழைய முறையை விட அதிகளவான வருமானமே இதில் கிடைக்கிறது” என்றார்.

Related Articles