இலங்கை -இந்திய எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது.
சுமார் ஒன்றே கால் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய தீவான கச்சதீவு,இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள தீவாகவும் கருதப்படுகிறது.
கச்சத்தீவு ஆரம்பத்தில் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்த போதிலும் பின்னர் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அதனை இலங்கைக்கு பரிசாக அளித்திருந்தார்.
கச்சத்தீவு இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையின் கடல்பரப்பு சற்று அதிகமானதுடன், மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையும் வலுபெற ஆரம்பித்து.
கச்சத்தீவை இந்தியா மீளப் பெற வேண்டுமென தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் தொடர்ந்து இந்திய மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
அதேவேளை, புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவில் இந்தியர்களுக்கு பங்கு கொள்ளும் உரிமை இருந்துவருகின்றது.
எனினும் கடந்த ஆண்டில் இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்களை கண்டித்து இந்திய மீனவர்கள் திருவிழா உற்சவத்தை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.