யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக இன்று புதன் கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளனர்..
நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தொடர்ச்சியாக யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்களாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையிலும் நோயாளர்களின் பாதுகாப்பை யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகம் உறுதி செய்யத் தவறியுள்ளது.
அதனால் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது 5 அம்சக்கோரிக்கைகள் நோயாளரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதனால் நீண்டகால நோக்கிலான சரியான முடிவுகள் எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர வாய்ப்புள்ளது. அதனால் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.