கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை முதல் வலைப்பாடு வரையான சுமார் 35 கிலோமீற்றர் நீளமாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை பெரு வெற்றியடையச்செய்த பூநகரி பிரதேசசபை பணியாளர்களிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே நிகழ்வின் முடிவில் பங்கெடுத்த கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர நாடு முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் குப்பைகளை அப்புறப்படுத்தல் மாத்திரம் அல்ல. இனவாதம், மதவாதம், ஊழல், மோசடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் யுத்த முடிவின் பின்னராக இப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தூய்மையாக்கல் பணியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தரம் பிரித்து எடுத்து செல்வதில் பூநகரி பிரதேச சபையின் வாகனங்களும் பணியாளர்களும் முழு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
இந்நிலையிலேயே பலரும் தமது பாராட்டுக்களை பணியாளர்களிற்கு தெரிவித்துள்ளனர்.