Home யாழ்ப்பாணம் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள 09 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவு

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள 09 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவு

by ilankai

தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய ஐந்து கட்சிகளும், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவ கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஜனநாயக தமிழரசு கூட்டணி ஆகிய கட்சிகள் கூட்டாக ஓர் அணியாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளோம் 

உள்ளூராட்சி தேர்தலை தமிழ் மக்களின் முக்கியமான தேர்தலாக நாங்கள் கணிக்கிறோம். ஆகவே தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து தேர்தலை கேட்கவுள்ளோம். 

அதற்காக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க கூடியவர்களை ஒன்று இணைத்து வருகிறோம். இன்றைய தினம் எம்முடன் இணையாதவர்கள் எதிர்காலத்தில் எம்முடன் இணைவார்கள் என நம்புகிறோம்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என சங்கு சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.

வடக்கு , கிழக்கில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் தெரிவு குழுவை நியமிப்போம் 

எம்முடன் இணைவது தொடர்பில் தமிழரசு கட்சியுடன் பேசியுள்ளோம் திட்டவட்டமான பதில் சொல்லவில்லை அவர்களுடன் பேச்சுக்களை நடத்துறோம் என மேலும் தெரிவித்தார். 

இன்றைய கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. ரவீந்திரா (வேந்தன்), தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் சமத்துவ கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles