Home யாழ்ப்பாணம் காலம் வரும் போது பேசலாம்!

காலம் வரும் போது பேசலாம்!

by ilankai

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது.

தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று வீட்டில் சந்தித்து கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடிதத்தை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பிற்கான பதில் கடிதமொன்றை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாட விடுக்கப்பட்ட அழைப்பு கடிதம் தொடர்பில் எமது மத்திய செயற்குழுவின் கடந்த 16ம் திகதிய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் அதற்கான முன்வரைவு எதையும் சமர்ப்பிக்காத நிலையிலும் நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

மேலும் எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அரசாங்கம் அதன் அரசமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles