Home கிளிநொச்சி யாழ். நோக்கி ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது தாக்குதல்

யாழ். நோக்கி ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது தாக்குதல்

by ilankai

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்த ஆசிரியர்களின் பேருந்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதலை மேற்கொண்டதில், பேருந்தின் கண்ணடிகள் சேதமடைந்துள்ளன. 

வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கற்பிக்க செல்லும் ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில் வாடகைக்கு பேருந்தினை சேவைக்காக அமர்த்தி அதில் பயணித்து பாடசாலைக்கு சென்று வந்தனர் 

அவ்வாறு வாடகைக்கு பேருந்தினை சேவைக்கு அமர்த்தி ” விசேட சேவை” என குறித்த பேருந்து ஆசிரியர்களை ஏற்றி செல்வதனால் , யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித்தடத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை , சிவில் உடையில் நின்ற சிலருடன் , போக்குவரத்து பொலிஸார் இருவர் பேருந்தினை மறித்து இவ்வாறு ஆசிரியர்களை ஏற்றி செல்ல முடியாது ,எனவும்  விசேட சேவை என பேருந்து சேவையில் ஈடுபட முடியாதது என சாரதியுடன் முரண்பட்டு தண்டம் விதித்துள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Articles