பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் ஐரோப்பியத் தலைவர்கள் மூன்று மணி நேர அவசர பேச்சுவார்த்தைகளை நடந்தினர்.
இன்று திங்களன்று பாரிஸில் அவசர பேச்சுவார்த்தைகளுக்காக கூடிய ஐரோப்பிய தலைவர்கள் கண்டத்தின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க அதிக செலவினங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தையும் ஆதரிக்க உக்ரைனுக்கு அமைதி காக்கும் படையினரை அனுப்புவது குறித்த யோசனையில் பிளவுபட்டனர்.
அதே நேரத்தில் ஒரு சமாதான ஒப்பந்தம் இல்லாமல் உக்ரைன் போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது ஆபத்தானது என்றும், அமெரிக்க ஆதரவின் அளவைப் பொறுத்து உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச பேச்சுவார்த்தைகளில் தங்களுக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய தலைவர்கள் திங்களன்று வலியுறுத்தினர்.
ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, டென்மார்க், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு அமைதி காக்கும் துருப்புக்களின் சாத்தியம் குறித்து பொதுவான கருத்து இல்லாமல் போனது.
நீடித்த சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரைன் நிலத்திற்கு பிரிட்டிஷ் படைகளை மற்றவர்களுடன் அனுப்புவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்காவின் ஆதரவை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கோரினார்.
உக்ரைனை மீண்டும் தாக்குவதிலிருந்து ரஷ்யாவை திறம்படத் தடுப்பதற்கான ஒரே வழி, அமெரிக்காவின் ஆதரவு பாதுகாப்பு உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், போலந்து போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிளவு ஏற்பட்டது. அவை உக்ரைன் மண்ணில் தங்கள் இராணுவ முத்திரையை விரும்பவில்லை என்று கூறியுள்ளன. மக்ரோன் இந்த விடயத்தில் உறுதியற்றவராக இருந்தார்.
நாம் என்ன பங்களிக்க முடியும் என்பது குறித்து ஐரோப்பியர்கள் ஒரு பொதுவான முடிவுக்கு வர வேண்டும் என்பதை நெதர்லாந்துப் பிரதமர் டிக் ஸ்கூஃப் ஒப்புக்கொண்டார்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நம்பிக்கையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் பல ஆண்டுகால அமெரிக்கக் கொள்கையை மாற்ற டிரம்ப் முடிவு செய்தபோது இந்த திருப்புமுனை ஏற்பட்டது.
நேற்று திங்கட்கிழமை பாரிஸில் நடந்த சந்திப்புக்கு சற்று முன்பு, மக்ரோன் டிரம்புடன் பேசினார். ஆனால் மக்ரோனின் அலுவலகம் 20 நிமிட விவாதம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவில் தொடங்கவுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் உக்ரைனையும் தவிர்த்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ததை அடுத்து, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பாரிஸ் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவிலை என்பதற்கு கிறீஸ் நாடு தனது கண்டனத்தை வெளியிட்டது.