இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள முன்னைய கோத்தபாய அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
எனினும் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, எரிசக்தி துறை உரிமைக்கு அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், தான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அநுரகுமார திசாநாயக தெரிவித்திருந்தார்.
அநுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய குழுவொன்று அமைக்க உள்ளதாகவும், அந்தக் குழு தனது பணியை நிறைவு செய்த பின், திட்டத்தில் என்ன மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்தது.
அத்தகைய பின்புலத்திலேயே அந்தத் திட்டங்களை கைவிடுவதாக கடந்த வாரம் அதானி குழுமம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இலங்கையிலிருந்து முதலீட்டாளர் ஒருவர் வெளியேறிவிட்டதாக எதிhக்கட்சிகள் விமர்சிக்கின்றன.
எனினும் திட்டம் கைவிடப்பட்டதால் இலங்கைக்கு எந்த வருத்தமும் இல்லை என அனுர கூறியிருந்தார்.