சொத்து மற்றும் நிதி மோசடி தொடர்பாக மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித மற்றும் அவரது பாட்டி மீது வழக்குத் தாக்கலாகியுள்ளது. மகிந்தவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச சட்டத்தரணி பரீட்சையில் மோசடி செய்த குற்றச்சாட்டில் உயர்மட்ட விசாரணை ஆரம்பமாகியுள்ளது. நேற்றுவரை முடிந்தால் கைது செய் என்று ஆட்சித்தரப்புக்கு சவால் விட்ட நாமல், இன்று சட்டம் தங்கள் மீது பாய்வதைக் கண்டு அதனை அரசியல் பழிவாங்கல் என்கிறார். எப்போதுமே அரசியல் போர்வையை கழற்ற மறுப்பவர்களின் வாய்ப்பாடு இதுதான்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்திய மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு இதய வணக்கத்தை அர்ப்பணித்து இன்றைய பத்தியை ஆரம்பிப்பதே முறைமையாகும்.
1984ன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஈழமுரசு தினசரி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் பயிற்சி ஊடகராக முதற்சுழி போட்டு, 1986ல் பிரசவமான முரசொலி தினசரியில் பிரகாசமான ஊடகராக மிளிர்ந்து இரண்டு பத்திரிகைகளினதும் பிரதம ஆசிரியரின் பாசறையில் புடம்போட்ட முன்னணி ஊடகரானவர் திரு. பாரதி.
1990களில் கொழும்பு சென்று அங்கு இரண்டு பத்திரிகைகளில் தினசரி, மற்றும் வாரமலர் பத்திரிகைகளில் தலைமைப் பதவியை ஏற்று சிறப்பாகப் பணி புரிந்தபின் தாய்மண் திரும்பிய பாரதி, சிறிது கால ஓய்வின் பின்னர் மீண்டும் பத்திரிகைப் பணியில் கால் வைத்த வேளையில் – தமது 62வது வயதில் மறைந்தது எவரும் எதிர்பாராதது.
இராஜநாயகம் பாரதி நல்லதொரு பண்பான பத்திரிகையாளர். தமிழ்த் தேசியத்தை வேசமாக்காது இறுதிவரை நேசித்தவர். எவரது மனதும் புண்படாதவகையில் அரசியல் மற்றும் பொருளாதார பக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு எல்லோருக்கும் பொதுவானவராக வாழ்ந்தவர் என்பதை அவரது இறுதிச் சடங்கில் பங்குபற்றிய ஊடகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுச்சேவையாளர்கள் சுமார் இரண்டு மணிநேரம் நிகழ்த்திய இரங்கல் உரைக;டாக நிரூபணமாகியது.
இரண்டு தசாப்தங்களாக தலைநகர் பத்திரிகைகளில் பணியாற்றி பன்மொழி ஊடகர்களுடன் நெருங்கிப் பழகியதோடு தமிழ் ஊடக ஒன்றியத்தினை உருவாக்கி அதன் தலைவராகவும் இயங்கிய பாரதியின் இறப்புப் பற்றி, அங்குள்ள ஆங்கில சிங்கள ஊடகங்கள் எதுவுமே குறிப்பிடாது மௌனம் காத்தது ஏன் என்ற கேள்விக்கு ஒரு சொல்லில் பதில் சொல்லலாம்.
இதுதான் எக்கராஜ்ய என்பதுக்குள்ளான இனஒற்றுமை, பாகுபாடின்மை, சமத்துவம் என்பதை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் வாழ வேண்டுமென்று கூறி வருபவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.
தமிழரசுக் கட்சியை உருவாக்கிய தந்தை செல்வாவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்த, தமிழரசின் கடந்த பத்து வருடகால தலைவராகவிருந்த மாவை சேனாதிராஜா பிறந்த மாவிட்டபுரத்தை உள்ளடக்கிய காங்கேசன்துறையின் தையிட்டி கடந்த சில நாட்களாக போராடியது. இங்கு குடியிருந்தவர்களின் காணிகளை அடாத்தாக எடுத்த சிங்கள இராணுவம் அங்கு நிறுவிய பாரிய திஸ்ஸ விகாரையே இதற்குக் காரணம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் இதற்கான எதிர்ப்புப் பேரணி முன்னைய காலங்களைவிட இம்முறை வேகமாக முன்னெடுக்கப்பட்டது. அதேசமயம், ஏற்றுக் கொள்ள முடியாத பலரது கருத்துகளையும் கேட்க முடிந்தது. விகாரை அமைந்துள்ள பெருநிலப்பரப்பு பௌத்த சங்கத்துக்கு சொந்தமானது என்ற அறிக்கையும் எங்கிருந்தோ வந்தது. இனவாதத்தில் தோய்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சரத் வீரசேகரவுக்கு இவ்விவகாரம் அவல் கிடைத்தது போன்றிருந்தது.
எதனை எங்கே பேசுவது என்று தெரியாத சில தமிழ்த் தலைவர்கள் திஸ்ஸ விகாரையை இடிக்க வேண்டுமெனக் கூறி தெற்கின் இனவாதிகளுக்கு தீப்பந்தத்தைக் கொடுத்தனர். கடந்த சில வருடங்களாக முக்காடுக்குள் முடங்கிக் கிடக்கும் சிங்கள இனவாதிகள் இதனைக் கையில் எடுத்திருந்தால் எவ்வகையான களேபரம் ஏற்பட்டிருக்குமென்பதை சிந்திக்காது உரையாற்றியதைத் தவிர்த்திருக்கலாம்.
மக்களால் துரத்தியடிக்கப்பட்டு, கீழே வீழ்த்தப்பட்டு தலை தூக்கக் காத்திருக்கும் ராஜபக்சவினருக்கு பிராணவாயு ஊட்டி மீள் எழும்பச் செய்து தெற்கில் தமிழர் மீது இன்னொரு இன அழிப்பை ஏற்படுத்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததாக இது மாறலாம் என்பதை ஏனோ எமது தலைவர்கள் சிலர் மறந்துவிட்டனர். விடுதலைப் புலிகள் காலத்தில் எந்தவொரு வழிபாட்டுத் தலமும் தாக்கப்படவில்லையென்பதையும், அனைத்துக்கும் தக்க பாதுகாப்பை அவர்கள் வழங்;கியிருந்தார்கள் என்பதையும் அவர்களின் பெயரை தங்கள் தலையில் சுமந்து தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ராஜபக்சக்கள் பற்றி இங்கு குறிப்பிடும்போது, இலங்கையின் தற்போதைய ஆட்சித்தரப்பு கடந்த இரண்டு தேர்தல்களிலும் தெரிவித்த மோசடிக்காரர் மீதான நடவடிக்கை பற்றி இப்போது சில செய்திகள் வருகின்றன. பதவியிலிருந்து துரத்தப்பட்ட கோதபாய இயலுமானவரை அமைதியை அனு~;டிக்கிறார். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பி அரசியலில் ஈடுபடப்போவதாக அவரது கூட்டத்தினர் தெரிவித்து வருகின்றனர். விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்;ராட்சித் தேர்தலுக்கு ஒரு முட்டுக்கட்டை வந்துள்ளது.
உள்;hரட்சி மன்ற தேர்தலுக்கான சட்டமூலம் நாட்டின் அரசமைப்புக்கு முரணானது என்றும் அதனை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமெனவும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இத்தேர்தல் மாகாண சபைத் தேர்தல் போன்று எப்போது இடம்பெறுமென்று நிச்சயித்துச் சொல்ல முடியாதுள்ளது.
சமவேளையில், பொதுஜன பெரமுனவிடமிருந்து பிரிந்து சென்று கடந்த இரண்டு தேர்தல்களிலும் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்திருந்தவர்களை அழைத்து ஒரு கூட்டத்தை அண்மையில் மகிந்த நடத்தினார். பிரிந்தவர் கூடினர் என இந்தக் கூட்டத்துக்கு தலைப்பு வந்தது. மறுதரப்பில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சஜித் தலைமையிலானவர்களை ரணிலுடன் இணைக்கும் முயற்சியும் சாண் ஏற முழம் சறுக்கும் வகையில் ஏறி இறங்குகிறது. ரணில் ஒரு நரியன் – நம்ப முடியாது என்ற நிலைப்பாட்டில் சஜித் இன்னமும் உள்ளதால் இவர்களின் இணைப்பு கேள்விக்குறியாகவுள்ளது.
பெரமுனவினதும் – சஜித்தினதும் இணைப்பு முயற்சிகளை கவனித்த அநுர குமார, ‘பிரிந்திருந்த திருடர்கள் மீண்டும் இணைய முயற்சிக்கின்றனர்” என்று விளாசியுள்ளார். கள்வர்கள், கொள்ளையர்கள், மோசடிக்காரர்களை சட்டத்தின்முன் நிறுத்த தேர்தல் காலத்தில் சொன்னதுபோல நடவடிக்கை எடுக்கப்படும் நேரத்தில் அவர்கள் மீள இணைந்து மக்களை ஆட்சிக்கெதிராக திசை திருப்ப முனைகின்றனர் என்பது அநுரவின் எச்சரிக்கை.
அறகலய காலத்தில் தங்கள் வீடுகளும் சொத்துகளும் எரித்தும் தகர்த்தும் அழிக்கப்பட்டதாக பட்டியலிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ந~;ட ஈடாக ரணில் தரப்பு அள்ளிக் கொடுத்த பில்லியன்கள் பற்றிய பட்டியல் இப்போது பகிரங்கமாகியுள்ளது. இந்தப் பணத்தை மீளப் பெற வேண்டுமென்று பல சமூக அமைப்புகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
ஏற்கனவே கைதாகி விடுதலையான மகிந்தவின் இரண்டாவது மகன் யோசிதவும், அவரது பாட்டியான டெய்ஸி போரஸ்ட் விக்கிரமசிங்கவும் சொத்துக்குவிப்பு, நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே பயணத்தடையுடன் நீதிமன்றப் பிணையில் விடப்பட்டவர்கள்.
மகிந்தவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச 2011ம் ஆண்டு சட்டத்தரணியானது தொடர்பாக குற்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் இது ஒரு பழைய விசயம். ஆனால் இப்போது மீண்டும் கிளறப்பட்டுள்ளது. அப்போது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தமையால், மகன் நாமலின் பாதுகாப்பு கருதி அவரை தனியொரு அறையில் சட்டக்கல்லூரி இறுதிப் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டது. அவ்வேளை வேறு இரு சட்டத்தரணிகள் அவருக்கு உதவி செய்து பரீட்சையில் சித்தி பெறச் செய்ததாக பல வருடங்கள் பெருமளவில் சொல்லப்பட்டு வந்தது. இப்போது அதிகாரபூர்வமாக விசாரணையை அவர் சந்திக்க நேர்ந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச சட்டத்தரணியாக சித்தியடைந்தது தொடர்பாகவும் ஒரு விடயம் அன்றிலிருந்து பேசப்பட்டு வருகிறது. 1970ல் இவர் நாடாளுமன்ற உறுப்பினரானார். அப்போது இவர் சட்டத்தரணியல்ல. சிறிமாவோ ஆட்சியில் நீதி அமைச்சராகவிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக்கல்வியை பெறுவதற்கு ஒரு சலுகையை அறிவித்தார். இதன் பிரகாரம், ஜி.சி.ஈ.உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திராவிட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்று சட்டத்தரணியாக இது வழிவகுத்தது.
இச்சலுகை வழியாக சட்டக்கல்லூரிக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவுக்கு இறுதிப் பரீட்சையில் அவரது நெருங்கிய நண்பரான இன்னொரு சட்டத்தரணி ஷகுதிரை| ஓடியதாக அவரது கட்சியினரே பகிரங்கமாகத் தெரிவித்து வந்தனர். இதனை நிரூபிக்கும் வகையில் பரீட்சையில் உதவிய அந்தச் சட்டத்தரணிக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும், நீர்கொழும்பு வைபவம் ஒன்றில் அவர் கொல்லப்பட்ட இடத்துக்கு அவரது மனைவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அமைச்சர் பதவியும் கிடைத்தது பற்றி பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஷஅப்பன் வழி மைந்தன்| என்றவாறு இவர்களின் சட்டக்கல்வி ஏதோ ஒருவகையில் புகழ் பெற்றிருந்தது.
எதிர்பாராது வந்த ஜே.வி.பி.யின் அரசாட்சி இப்போது எல்லாக் குப்பைகளையும் கிளற ஆரம்பித்துள்ளது. கொள்ளையடித்தவர்கள் மற்றும் மோசடிக்காரர்கள் மீது அநுர ஆட்சிக்கு வந்து மூன்று மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு இவர்கள்மீது வீசப்பட்டு வந்தது. இதனைத் தனது பலமாக்கிய நாமல் ராஜபக்ச பல தடவைகள் நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் முடிந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பகிரங்க சவால் விடுத்து வந்தார்.
அநுர அரசு அதிரடியாகவன்றி ஆற அமர்ந்து பொலிஸ் விசாரணை, நீதித்துறை விசாரணைக;டாக தனது வேலையை ஆரம்பித்துள்ளது. நடவடிக்கை எதனையும் எடுக்காதிருந்த வேளையில் அநுர தரப்பைப் பார்த்து, முடிந்தால் எங்களைக் கைது செய் என்று சவால் விட்ட நாமல் ராஜபக்ச, இப்போது சட்டம் தனது கடமையை செய்ய ஆரம்பிக்கையில் இது அரசியல் பழிவாங்கல் என்று கூச்சலிடுகிறார்.
இதுதான் இலங்கை அரசியல். குடும்ப அரசியல் போர்வைக்குள் ஒளிந்து வாழ முனையும் அரசியல்வாதிகளுக்கு ஷஅரசியல் பழிவாங்கல்| என்பது என்றுமே தங்கள் ஆதரவாளர்களை இழுப்பதற்கான ஒரு வாய்ப்பாடு.