இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
போராட்டம் கடந்த 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஓகஸ்ட் மாதம் வேலன் சுவாமிகள், கே.வி.சிவாஜிலிங்கம், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக இலங்கை காவல்துறையினால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கானது நீண்டகாலமாக தவணையிடப்பட்டு வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கிளிநொச்சி சட்டத்தரணிகள் பிரதிவாதிகள் சார்பில் பிரசன்னமாகியிருந்தனர்;.
இந்நிலையில் வழக்கானது இன்று நீதவானால் கிடப்பில் போடப்பட்டது.
வழக்கானது இன்றைய தினம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. எத்தனை வழக்குகள் வந்தாலும் உயிர் இருக்கும் வரை மண் மீதான காதலும், இன விடுதலையும் அதற்கான போராட்டமும் எப்பொழுதும் தொடரும் என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் செய்யும் போராட்டங்கள் மீது அரசின் உத்தரவின் பெயரில் இலங்கை காவல்துறை அவ்வப்போது பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும் மிகவும் கண்டிக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.