இலங்கையின் வடபுலத்தில் தமது காற்றாலை மின்சக்தி திட்டத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக இந்திய வர்த்தகர் கௌதம் அதானியின் அதானி குழுமமான அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளது.
தமது பணிப்பாளர் சபையின் முடிவை இலங்கைக்கு அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளதாக அதானி குழுமத்துக்கான பேச்சாளரொருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், இலங்கையரசாங்கம் விரும்பினால் எதிர்கால கூட்டிணைவுக்கு தயாராகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே பூநகரி மற்றும் மன்னார் பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த அதானி குழுமம், அரசாங்கங்களின் ஒப்புதல்கள் மற்றும் முடிவுகளில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இலங்கையிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது.
இலங்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதானி குழுமம் இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு தெரிவித்துள்ளபோதும் இலங்கை அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.
புது டில்லிக்கு சமீபத்தில் சென்றிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அதானி திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் விவாதித்தனர், ஆனால் அதானி நிறுவனம் மேற்கோள் காட்டிய கட்டணம் மிக அதிகமாக உள்ளதாக அனுர அரசு குற்றஞ்சுமத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.